வழக்கறிஞர் எச்.கே.சிங், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்துள்ளார். ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் ரூ .15 லட்சம் போடுவதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புகார் தொடுக்கப்பட்டவர்கள்:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மோசடி மற்றும் நேர்மைத்தவறி நடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வழக்கில் ராஞ்சியில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் மூன்றாவது குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அட்டாவ்லே.
மாநில உயர்நீதிமன்றத்தில் வக்கீலான புகார்தாரர் எச்.கே.சிங், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார், அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நபரின் வங்கிக் கணக்கிலும் ரூ .15 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதியளித்து மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு?
இந்திய தண்டனைச் சட்டத்தின் 415 (மோசடி) , 420 (நேர்மையின்மை) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று முன் தினம் துவங்கியுள்ளது.
புகார்தாரரின் கேள்வி:
“பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறே குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து விட்டது, ஆனால் ஒவ்வொரு நபரின் கணக்கிலும் ரூ .15 லட்சம் வரவு வைக்கப்படும் என்பதும் பாஜக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட ஒரு வாக்குறுதியாகும் ,ஆனால் அது மட்டும் ஏன் நிறைவேற்றப்படவில்லை ?” என்று எச்.கே.சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குகளைப் பெற தவறான வாக்குறுதியை அளிக்க கூடாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. அப்படி செய்வது “மக்களுடன் மோசடி செய்வதாகும்” என்று எச்.கே.சிங் வாதிடுகிறார். இந்த வழக்கு மார்ச் 2 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
வழக்கறிஞர் எச்.கே.சிங் எழுப்பியுள்ள கேள்விகள் ஒருபுறமிருந்தாலும் பாஜக தேர்தல் அறிக்கையில் 15 லட்சம் குறித்து குறிப்பிடவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.