மத்திய பிரதேச அமைச்சரவை இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. சிஏஏ ரத்து செய்ய வேண்டும் எனவும் அமைச்சரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டம் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.சி. ஷர்மா செய்தியாளர்களிடம் கூறினார்.
“மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளமாகும், அதை மாற்ற முடியாது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அரசியலமைப்பின் 14 வது சட்ட பிரிவு நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தை அளிக்கிறது” என்று அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் ஒரு பகுதியைப் படித்து காண்பித்தார் பி.சி. ஷர்மா.
கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை CAA ஐ ரத்து செய்யக் கோரி ஏற்கனவே தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது