டெல்லி சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் நேற்று தெற்கு டெல்லியில் ஜங்புராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
அப்போது பேசிய அவர் “சீனாவைத் தவிர உலகில் மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகிறது. ஆனால் தற்போதுள்ள (புதிய) இந்தியாவை அவர்கள் காணும்போது வெறுப்பு, வன்முறை, கற்பழிப்பு, ரவுடித்தனம், கொலைகள் ஆகியவற்றையே காண்கிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் எங்கு பார்த்தாலும், ஒரு இந்தியர் மற்றொரு இந்தியருடன் வெறுப்புணர்வுடனேயே பேசும் நிலைமை உண்டாகியுள்ளது. இது நமது கடந்த கால வரலாறாக இருக்கவில்லை. இது அன்பின் நாடு ” என்று ராகுல் காந்தி கூறினார்.
‘இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், ரயில்வே போன்ற அரசு நிறுவனங்களை அரசாங்கம் விற்பனை செய்வதாக அவர் குற்றம் சாட்டினார். இதில் செங்கோட்டையை கூட மோடி அரசு விட்டுவைக்கவில்லை.’
“அவர் (மோடி) தாஜ்மஹாலை கூட விற்றுவிடுவார் போல” என்று ராகுல் காந்தி கூறினார்.
பொருளாதார மந்தநிலை மற்றும் வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு பாஜக வன்முறையை ஊக்குவித்து வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.