முன்னாள் மத்திய அமைச்சரும் உத்திர கன்னடா பாஜக எம்பியுமான அனந்த் குமார் ஹெக்டே பெங்களூரில் நடந்த விழா ஒன்றில் காந்தியின் போராட்டம் ஒரு நாடகம் என்றார். காந்தி போலீசாரால் ஒரு அடி கூட வாங்கியதில்லை, இவரை எப்படி மகாத்மா என அழைக்க முடியும். அவரது உண்ணா விரதமும், சத்தியாகிரகமும் வெற்று நாடகம் தான் என்று ஹெக்டே கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பலரும் இவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சனிக்கிழமை பெங்களூரில் ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, உத்தர கன்னடத்தைச் சேர்ந்த பாஜக மக்களவை எம்.பி அனந்த்குமார் ஹெக்டே, “இந்திய சுதந்திரத்திற்கான முழு போராட்டமும், ஆங்கிலேயர்களின் சம்மதத்துடனும் ஆதரவிலும் தான் நடத்தப்பட்டது” என்று பேசியுள்ளார்.
“அது சுதந்திர போராட்டம் அல்ல, அட்ஜஸ்ட்மன்ட் போராட்டம்” :
“இந்த (சுதந்திர போராட்ட) தலைவர்கள் என்று அழைக்கப் படுபவர்களில் எவரும் ஒரு முறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை. அவர்களின் சுதந்திர இயக்கமே ஒரு பெரும் நாடகம். இது ஆங்கிலேயர்களின் ஒப்புதலுடன் இந்த தலைவர்களால் நடத்தப்பட்டது. அது ஒரு உண்மையான போராட்டம் அல்ல. அது ஒரு அடஜஸ்ட்மன்ட் செய்து கொண்ட சுதந்திரம் போராட்டம், “என்று அவர் பேசியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஹேக்டே மேலும் கூறுகையில் ‘மகாத்மா காந்தியின் உண்ணாவிரதமும் மற்றும் சத்தியாக்கிரகமும் ஒரு “நாடகமே” என்றும் குறிப்பிட்டார்.
ஆங்கிலேயர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தால் வெளியேறவில்லை:
“காங்கிரஸை ஆதரிக்கும் மக்கள் இறக்கும் வரை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதால் தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள். இது உண்மையல்ல. சத்தியாக்கிரகம் காரணமாக ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை” என்றும் அவர் கூறினார்.
“ஒரு விரக்தியினால் தான் பிரிட்டிஷ்ஷார் சுதந்திரத்தை வழங்கினர். வரலாற்றைப் படிக்கும்போது என் இரத்தம் கொதிக்கிறது. இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் மகாத்மாவாக மாறுகிறார்கள்” என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார் ஹெக்டே.