நிதியாண்டு 2020-21 ரிற்கான பஜ்ஜட் வருகிற பெப்ரவரி 1 சனிக்கிழமையன்று தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்கு பிறகு பிரிக்ஸ் வங்கியின் தலைவரும், மூத்த வங்கி நிர்வாகியுமான கே.வி.காமத் மத்திய நிதி அமைச்சராக பதவி ஏற்க கூடும் என நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏன் மாற்றம்?:
நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை தவறாக கையாள்வதாக மோடி அரசு உணர்வதாகவும், அதனால் அவரையும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் அனுராக் தாகூர் என இருவரையும் நீக்கி மற்றவர்களை பதவியில் அமர வைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் பதவி ஏற்பார்கள்?:
வலதுசாரி சிந்தனையாளர் ஸ்வப்பன் தாஸ்குப்தா மற்றும் நிட்டி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோரும் அமைச்சகத்தில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ் ஸும் விரைவில் கே.வி.காமத் நிதி அமைச்சகத்தில் இடம்பெறுவார் என செய்தி வெளியிட்டது.
கே.வி.காமத் யார்?
பிரிக் வங்கியில் பணியாற்றுவதற்கு முன்பு இன்போசிஸின் தலைவராகவும், ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாகமற்ற தலைவராகவும் பணியாற்றியவர். பண்டிட் தீன்தயால் பெட்ரோலிய பல்கலைக்கழக ஆளுநர் குழுவில் உறுப்பினராக உள்ளவர். ஹூஸ்டனை தளமாகக் கொண்ட எண்ணெய் சேவை நிறுவனமான ஸ்க்லம்பெர்கர் மற்றும் இந்திய மருந்து உற்பத்தியாளர் லூபின் ஆகிய நிறுவனங்களில் சுயாதீன இயக்குநராக பணியாற்றியவர் கே.வி.காமத்.