பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று பாஜகவில் இணைந்தார். பிப்ரவரி 8 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவர் கட்சியில் இணைந்துள்ளதால் சைனா நேவாலை பாஜக வின் பிரச்சார களத்தில் காண அதிகம் வாய்ப்புள்ளது.
நானும் உழைப்பாளி, மோடியும் உழைப்பாளி:
“நான் நாட்டிற்காக பதக்கங்களை வென்றுள்ளேன், நான் மிகவும் கடின உழைப்பாளி, நான் கடின உழைப்பாளிகளை நேசிக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்காக செயல்பட்டு வருவதை என்னால் காண முடிகிறது, அவருடன் இணைந்து நானும் இந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்” என்று நேவால் கூறினார்.
திடீர் முடிவா?
இது திடீரென நடந்த நிகழ்வல்ல. இவர் தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக பல டிவீட்களை செய்து வந்தார். பிரதமர் மோடி பெண்களுக்கு நன்மை செய்கிறார், அவர் நல்லவர் வல்லவர் என்கிற பாணியில் கடந்த ஆண்டு பல பிரபலங்கள் ஒரே வாசகத்தை அச்சு பிசகாமல் பதிவிட்டு மாட்டி கொண்டனர். மோடி தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் விதமாக இவ்வாறு பிரபலங்களுக்கு அனுப்பி பதிய செய்கிறார் என்று அப்போதே விமர்சனங்களும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இவரின் பாஜக வில் இணைந்ததற்கு பாஜக வினர் கொண்டாடி வந்தாலும் பெரும்பாலான மக்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முன்னதாக ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது போன்ற நாட்டின் சிறந்த விளையாட்டு விருதுகளால் அவர் கவுரவிக்கப்பட்டார். இவருக்கு 2016 ல் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கவுதம் கம்பீர், யோகேஸ்வர் தத், பபிதா போகாட், சந்தீப் சிங் உள்ளிட்ட பல விளையாட்டுப் பிரமுகர்கள் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது