Telangana

தெலுங்கானா: பாஜகவும் காங்கிரஸும் கூட்டணி – மக்கள் அதிர்ச்சி !

ஹைதிராபாத்: மணிகொண்டா நகராட்சியில் டி.ஆர்.எஸ் வெற்றி பெறுவதை தடுக்க பாஜகவும் காங்கிரசும் கைகோர்த்துள்ளன. மொத்தமுள்ள 20 நகராட்சி வார்டுகளில், காங்கிரஸ் எட்டு, பாஜக ஆறு, டிஆர்எஸ் ஐந்து, சுயேட்சை வேட்பாளர் ஒன்று என வெற்றி பெற்றுள்ளனர். பாஜக-காங்கிரஸ் கூட்டணி மாநில அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

மணிகொண்டா நகராட்சிக்கான காங்கிரஸ் பாஜக கூட்டணியின் படி தலைவர் பதவி காங்கிரசுக்கும், துணை தலைவர் பதவி பாஜக வுக்கு என இருண்டு கட்சிகளும் சமரசமாகி உள்ளன. அமங்கலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் மக்தல் நகராட்சியில் காங்கிரஸுடன் இணைந்துள்ளது பாஜக. இது ஒரு “புனிதமற்ற கூட்டணி” என டி.ஆர்.எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கருத்து தெரிவித்துள்ளார்.

“பாஜகவும் காங்கிரஸும் பாம்பும் கீரியையும் போல”:

“ஒன்றிரண்டு நகராட்சித் தேர்தல்களுக்காக காங்கிரசும் பாஜகவும் ஒன்று கூடி தங்கள் உண்மையான முகத்தை மக்களுக்கு காட்டியுள்ளன. பாஜகவும் காங்கிரசும் பாம்பும் கீரிப்பிள்ளையம் போன்றவை. இரு தேசிய கட்சிகளும் புதுதில்லியிலும், நாடு முழுவதும் எதிர்த்து மோதிக்கொள்கின்றன. ஆனால் இங்கே, டி.ஆர்.எஸ்ஸைத் தடுக்க மலிவான அரசியல் விளையாட்டை ஒன்றிணைந்து நடத்துகின்றனர். இப்போது, யார் எவர் என்ற உண்மை மக்களுக்கு புரிந்துவிட்டது.” என கே.டி. ராமராவ் மேலும் கூறினார்.

” யார் உண்மையில் ‘பி’ டீம் என மக்கள் அறிந்து கொண்டனர் “:

முன்னதாக, டிபிசிசி தலைவர் உத்தம்குமார் ரெட்டி, டிஆர்எஸ் பிஜேபியின் ‘பி’ அணி என்று சொல்லிக்கொண்டிருந்தார், உள்ளூர் பாஜக தலைவர் டாக்டர் கே. லக்ஷ்மன் டி.ஆர்.எஸ்ஸை காங்கிரஸின் ‘பி’ அணி என்று அழைத்தார். ஆனால் இந்த சமீபத்திய அசுத்தமான கூட்டணியால், யார் யாருக்கு ‘பி’ அணி என தெலுங்கானா மக்களுக்கு தெரிந்து விட்டது என கூறினார் கே.டி .ஆர்.

மேலும் “காங்கிரசும் பாஜகவும் கொல்லைப்புறத்தில் நண்பர்கள், அவர்கள் அதிகாரத்திற்காக தெருக்களில் போராடுகிறார்கள். 120 நகராட்சிகள், ஒன்பது மாநகராட்சி என 95 சதவீத இடங்களை டிஆர்எஸ் வென்றுள்ளோம். கரீம்நகர் மாநகராட்சியையும் நாங்கள் கைப்பற்ற உள்ளோம், ”என்றார் கே.டி.ஆர்.