Lynchings States News Uttar Pradesh

தப்ரேஸ் அன்சாரியின் கொடூர தாக்குதலை கண்டித்து, நீதி கேட்டு போராடிய மக்கள் மீது லத்தி சார்ஜ் செய்து , 850 நபர்கள் மீது FIR பதிவு செய்த யோகி ஆதித்யநாத் அரசாங்கம்

கடந்த சில தினங்களாக தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞரை கொடூரமாக அடித்துக் கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமைதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

பாஜக ஆளும் உபி. மாநிலத்தில் ஆக்ரா மற்றும் மீரட் பகுதிகளிலும் இஸ்லாமிய சமுதாய மக்கள் தங்கள் கண்டனங்களை ஜனநாயக முறையில் பதிவு செய்தனர். இறந்தவர் குடும்பத்திற்கு அரசு உதவி தொகை வழங்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர். இதை தொடர்ந்து போலீசார் கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீது திடீரென தடியடி நடத்தியது இதில் 12க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தனர்.

மீரட்டில் இருந்து கிடைக்கும் ஒரு செய்தி குறிப்பின்படி (National Herald பத்திரிகையின் படி ) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசில் கரும்புவள துறை அமைச்சராக இருக்கும் சுரேஷ் ராணா என்பவர் தான் முஸ்லிம் இளைஞர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (NSA ) கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கூறி உள்ளார் காரணம் ? போராட அனுமதி கிடைக்காத நிலையிலும் போராட்டத்தை நடத்தியது. ஏற்கனவே போலீஸ் பெயர் குறிப்பிட்டு 50 நபர்கள் மீது (FIR )முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது இது தவிர பெயர் குறிப்பிடாமல் 800 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

போராட்டக் குழுவினர் தாங்கள் நடத்தியது அமைதிப் பேரணி தான் என்றும் ஆனால் அவர்கள் மீது கிட்டத்தட்ட 14 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

போராட்டத்தை நடத்திய பிரமுகர்களில் ஒருவரான ஷகீல் அன்சாரி என்பவர் கூறுகையில் “நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது அருகில் இருந்த சில சிறு கடை வியாபாரிகள் எங்களை கேவலமாக பேசினார் மேலும் நாங்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினர் நாங்கள் எங்கள் தரப்பு நியாயத்தை அவர்களுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தோம் அப்போதுதான் போலீசார் அங்கு வந்து எங்கள் மீது தடியடி நடத்தினர்.” என்றார்.

பதட்டமான சூழல் நிலவிய காரணத்தினால் திங்களன்று அப்பகுதியில் இன்டர்நெட் சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது.

மேலும் ஷகீல் கூறுவதாவது: “நாங்கள் அமைதியான முறையில் ஜமா மஸ்ஜிதில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை தப்ரேஸ் அன்சாரி யின் கொடூரமான கொலையை கண்டிக்கும் விதமாக பேரணியாக சென்று கொண்டிருந்தோம் அப்போது தான் போலீசார் எங்களுக்கு எதிராக லத்தி சார்ஜ் செய்தனர்.ஒருவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்படுவார் அதை கண்டித்து ஜனநாயக முறையில் நாங்கள் போராடுவதற்கு கூட இந்த நாட்டில் உரிமை இல்லையா?” என்று கூறி முடித்தார் அன்சாரி.

இந்த பதட்ட நிலை மன்டோலா, மீரா ஹுசைனி வசிர்பூரா போன்ற பகுதிகளுக்கும் பரவியது. தற்போது சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.