CAA International News

‘அனைவரையும் சமமா நடத்துங்க!’ – முன்னாள் ஆப்கான் அதிபர் இந்தியாவுக்கு கோரிக்கை !!

மோடி அரசு கொண்டுவந்துள்ள சிஏஏ மற்றும் கொண்டு வர துடிக்கும் என்ஆர்சி, என்பிஆர் போன்றவற்றிற்கு எதிராக இந்திய மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வேளையில் ஆப்கான் நாட்டின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் சமமாக நடத்த வேண்டும் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இந்திய அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் என யாருமே இல்லை. ஆப்கானிஸ்தான் நாடே நீண்ட காலமாகப் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்கள், இந்துக்கள், சீக்கியர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.” என ஹமீத் கர்சாய் தி இந்து பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவில் சொல்லப்படுவது போல் ஆப்கானில் நிலை இல்லை :

ஹமீத் கர்சாய் பல ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தவர் ஆவார். “இங்கு இந்தியாவில் உணரப்படுவது போல் ஆப்கானிஸ்தானில் நிலைமை இல்லை. நான் அதிபர் ஆன போது (ஆப்கான் நாட்டின்) பள்ளி முதல்வர் ஒருவர் என்னை சந்தித்து. தாலிபான்களின் கையில் நம்மை விட இந்து மற்றும் சீக்கியர் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே அவர்களை எப்பாடு பட்டாவது இந்திய, பாகிஸ்தான் என அவர்கள் எங்கு சென்று இருந்தாலும் மீண்டும் அழைத்து வந்து அவர்கள் இழந்து விட்ட அவர்களின் சொத்துக்களை மீட்டு தாருங்கள் என கோரிக்கை வைத்தார். இது தான் ஆப்கன் மக்களின் உணர்வாக உள்ளது. இதே எண்ணம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என நம்புகிறேன்” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

https://twitter.com/aryansrivastav_/status/1219099580278566912

2011 ல் வெளியுறவு அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் ஆப்கானிஸ்தானில் இருந்து 18,000 க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.