டில்லியில் நேற்று நடைபெற்ற ரைசினா மாநாட்டில் பேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத், (காஷ்மீரில்) இராணுவம் ‘கடுமையாக நடந்து கொள்கிறது’ என்ற குற்றச்சாட்டை மறுத்தார், மேலும் பெல்லட் துப்பாக்கிகளை ‘குறைவாக’ பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
தீவிரமயமாக்கப்பட்ட சிறு குழந்தைகளை அடையாளம் கண்டு தீவிரமயமாக்கலில் இருந்து விடுவிக்கும் முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என்று ரைசினா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஸ்) ஜெனரல் பிபின் ராவத் கூறியுள்ளார். ரைஸினா உரையாடல் மாநாடு என்பது ஆண்டுதோறும் இந்தியா நடத்தும் உலகளாவிய விவகாரங்களின் (conclave of global affairs ) மாநாடாகும்.
சிறுவர்களையும் தனிமைப்படுத்தி முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்:
10 , 12 வயது சிறார்களும் தீவிரமயமாக்கப் படுகிறார்கள். அவர்களையும் நாம் கண்டறிய வேண்டும். அவரவரின் தீவிரமயமாக்கப்படளின் நிலையை கண்டறிந்து அவர்களை வகைப்படுத்தி பிரிக்க வேண்டும். பிறகு அவர்களை முகாம்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும். ஏற்கனவே தீவிரமயமாக்கலில் இருந்து விடுவிக்கும் முகாம்கள் இந்தியாவில் செயல்படுகிறன்றன என அவர் கூறியுள்ளார்.
தீவிரமயமாக்கலின் சித்தாந்தத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம் என்றும், “ஆன்லைன் தீவிரமயமாக்கலுக்கு” முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ராவத் குறிப்பிட்டார். மேலும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மத தளங்களில் வைத்து இவ்வாறான சிந்தனைகள் பரப்படுவதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு தீர்வு காண அமெரிக்காவை பின்பற்ற வேண்டுமாம்:
கடந்த செப்டம்பர் 11, 2001 தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா மேற்கொண்ட பாதையை பின்பற்றுவதே பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தலிபான்களை அதிகாரத்திலிருந்து பதவி நீக்கம் செய்து, பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி ஒசாமா பின்லேடனை வேட்டையாடத் தொடங்கியது, பின்னர் 2011 ல் பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் அமெரிக்க சிறப்புப் படைகளால் பின்லேடன் கொல்லப்பட்டார் என்று ராவத் கூறினார்.
மேலும் தீவிரவாதத்தை தொடர்ந்து சில நாடுகள் ஊக்குவித்து வருவதாகவும் பாகிஸ்தான் குறித்து சூசகமாக கருத்து தெரிவித்தார்.
கண்டனம்:
தனது வரையறையை தாண்டி அரசியல் விவகாரங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாக பலரும் இவரை விமர்சித்து வந்தாலும் ஜெனெரல் பிபின் ராவத் தனது போக்கை மாற்றி கொள்வதாக தெரியவில்லை என்ற ரீதியில் மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனங்களை தெரிவித்துளளார்.
அதே போல் பல்வேறு தரப்பினரும் ஜெனெரல் பிபின் ராவத்தின் கருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.