தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம், 2008 அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரளாவை தொடர்ந்து சட்டிஸ்கர்:
இதன் மூலம் NIA சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடரும் முதல் மாநிலமாக சட்டிஸ்கர் ஆகியுள்ளது. அதே போல கேரள அரசும் மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்தை எதிர்க்க இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில அரசங்கத்திற்கு மத்திய அரசுடன் பிரச்சனை எழும் போது நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடும் உரிமை இந்திய அரசியலமைப்பின் 131 வது பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சட்டிஸ்கர் மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மாநில இறையாண்மைக்கு எதிரானது NIA சட்டம்:
NIA சட்டம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையை பறிக்கும் விதத்தில் உள்ளது. அதிகார வரம்பு (ultra vires to the Constitution) மீறல். மேலும் மாநில போலீசாராக்கு அரசியலமைப்பின் நுழைவு 2, பட்டியல் 2, அட்டவணை 7 இன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமையை பாதிக்கும் விதத்திலும் உள்ளது என சட்டிஸ்கர் அரசு தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
மாநிலத்தின் சார்பாக வழக்கறிஞர் சுமர் சோதி மூலம் இந்த வழக்கு தாக்கல் செயப்பட்டுள்ளது. தற்போதைய வடிவத்தில் உள்ள என்ஐஏ சட்டமானது காவல்துறை மூலம் மாநில அரசு விசாரணை நடத்தும் அதிகாரத்தை பறிப்பது மட்டுமல்லாமல், “தடையற்ற, விருப்பப்படி மற்றும் தன்னிச்சையாக செயல்படும் அதிகாரங்களை” மத்திய அரசுக்கு வழங்குகிறது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு விருப்பப்படி செயல்பட அனுமதி:
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு தகுந்த காரணமோ , நியாயமோ வழங்காமல் எப்போது வேண்டுமானாலும் தனது விருப்பப்படி மத்திய அரசு செயல்பட இந்த சட்டம் அனுமதிக்கிறது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அதிகாரம் தொடர்பாக எந்த ஒரு முறையான விதிகளும் வகுக்கப்படவில்லை. மேலும் இந்த சட்டம் மாநில அரசின் இறையாண்மையை கேள்விக்குரியதாக ஆக்குவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
NIA ஏன் உருவாக்கப்பட்டது?:
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு, அரசின் பாதுகாப்பு, வெளிநாட்டு நாடுகளுடனான நட்பு உறவுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, அதன் முகவர் நிலையங்கள் மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் சர்வதேச ஒப்பந்தங்கள், மரபுகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதற்காக NIA (2008) சட்டம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.