மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர், ராமாயண காலத்திலேயே பறக்கும் பொருள்கள் இருந்ததாகவும், மகாபாரதத்தின் அர்ஜுனனின் அம்புகளுக்கு அணு சக்தி இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்தை விஞ்ஞானிகளும், அறிவுஜீவிகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
ஆளுனர் கருத்து:
45 வது கிழக்கு இந்தியா அறிவியல் கண்காட்சி மற்றும் 19 வது அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய போது இந்த கருத்துக்கள் தெரிவித்துள்ளார். ” விமானம் 1910 அல்லது 1911 இல் கண்டுபிடிக்கப்பட்டது… எனினும் நாம் நமது பண்டைய காலத்து வேதப்புத்தகங்களை ஆராய்ந்தால் … ராமாயணத்தில் யுரான் கட்டோலா (விமானம்) பயன் படுத்தப்பட்டுள்ளது. மகாபபாரதத்தில், களத்தில் இல்லாமலேயே சஞ்சய் கள சூழ்நிலை எல்லாவற்றையும் விவரிப்பார். அர்ஜுனனின் அம்புகளுக்கு அணு சக்தி இருந்தன”என்று தங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாபாரதத்தின் கூற்றுப்படி, தன் கண் முன்னால் நடைபெறாத நிகழ்வுகளையும் கூட பார்க்கும் பரிசைக் கொண்டிருந்தார் சஞ்சய். மேலும் குருக்ஷேத்திரத்தின் போரின் போது தூரத்தில் நடைபெறும் நிகழ்வை பார்வையற்ற மன்னரான த்ரிதராஷ்டிரரிடம் விவரிப்பார். இது பகவத் கீதையில் இடம்பெற்றுள்ளது. “உலக நாடுகளால் இனியும் இந்தியாவை புறக்கணித்து இருந்து விட முடியாது” என்று தங்கர் கூறினார்.
விஞ்ஞானிகள் கடும் விமர்சனம்:
இதனை தொடர்ந்து பல விஞ்ஞானிகளும் ஆளுநரின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை விட்டும் அவர் தவிர்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறி:
ஆளுநர் உரையை குறித்து கருத்து தெரிவித்த பத்ம பூசன் மற்றும் பத்மஸ்ரீ விருது பெற்ற மூத்த அணு இயற்பியலாளர் பிகாஷ் சின்ஹா கூறுகையில் : “அவர் பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறிகளைக் வெளிகாட்டுகிறார். விஞ்ஞானிகளாகிய எங்களுக்கு இத்தகைய விஷயங்களைக் கேட்கும்போது கோபம் வருகிறது. ஒருநாள் அவர் பகவான் கிருஷ்ணரின் சக்கரத்திற்கு ஹைட்ரஜன் குண்டின் சக்திகள் இருப்பதாகக் கூட கூறலாம். இது அபத்தமானது. அவர் ஆளுநராக இருப்பதால், அவர் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் அஞ்சுகிறேன். கடந்த காலத்திலேயே எல்லாம் கண்டுபுடிக்கப்பட்டு விட்டது, புதிதாக எதுவும் கண்டு புடிக்கப்படவில்லை என்று தான் அவர் கூற வருகிறார் ” என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு சின்ஹா பேட்டி அளித்துள்ளார்.
கவிஞர்களின் கற்பனை:
“மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட இவ்வாறான ஆளுநர்கள் எல்லாவற்றலும் மூக்கை நுழைத்து வருகிறார்கள் , அனைத்தையும் அறிந்தவர்கள் என எண்ணி கொள்கிறார்கள். மகாபாரதத்தில் ‘பசுபத் அஸ்ட்ரா’ போன்ற ஆயுதங்களைப் பற்றிய குறிப்பு உள்ளது உண்மை தான் .. , உலகத்தையும் மக்களையும் அழிக்கும் திறன் கொண்டது என அவைகள் குறித்து கூறப்பட்டுள்ளது. ராமாயணத்திலும் மிக விரைவாக பயணிக்க கூடிய “புஷ்பக் ராத்” பற்றிய குறிப்பு உண்டு.
ஆனால் பெரும் கவிஞர்கள் வலிமையான கற்பனை திறன் கொண்டவர்கள் என்பதை மட்டும் ஜகதீப் தங்கரைப் போன்றவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை“
என பிரபல இந்தோலாஜிஸ்ட் நரிசிங்க பிரசாத் பதுரி கருத்து தெரிவித்துள்ளார்.
பண்டைய இந்தியாவை சேதப்படுத்தும் ஆளுநர் :
“பண்டைய கவிஞர்கள் இந்த விஷயங்களை எல்லாம் தங்கள் கற்பனையின் அடிப்படையில் விவரித்தனர். தொன்மையான இந்தியா மிகவும் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது. ஆனால், தங்கரைப் போன்றவர்கள் பண்டைய இந்தியாவின் முன்னேற்றத்தையே சேதப்படுத்துகிறார்கள் என்றே நான் வருந்துகிறேன்” என்று மற்றொரு விஞ்ஞானியான சந்தீப் சக்ரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.