கண்டுகொள்ளாத மீடியா:
குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் 19 வயது தலித் சமூக பெண் ஒருவரை கடத்தி, கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, கொலை செய்து, பெண்ணை ஆலமரத்தில் தூக்கிலிட செய்துவிட்டு சென்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை.
எனவே தான் இது குறித்த செய்தி எந்த தொலைக்காட்சியிலும் முக்கியத்துவத்துடன் காண்பிக்கப்படவும் இல்லை.
அலைக்கழித்த போலீஸ்:
கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி , எங்கள் வீட்டு பெண் எங்கு தேடியும் காணவில்லை என பெண் வீட்டார் போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளனர். ஆனால் மோடாசா காவல் நிலைய ஆய்வாளர் என்.கே. ரபாரி புகாரை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல் உங்கள் வீட்டுப் பெண், உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவன் உடனே ஓடிப் போய் விட்டார் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விரைவில் வீடு திரும்புவார்கள் எனக்கூறி புகாரை பெற்றுக் கொள்ளாமல் பெண் வீட்டாரை அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் மறுநாள் பெண்ணின் வீட்டார் புகார் கொடுக்க சென்றிருந்த போது, இது எங்கள் வட்டத்திற்குள் வராது நீங்கள் சபல்பூர் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு புகார் கொடுங்கள் என்று கூறி மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.
பெண்ணின் உடல் :
இதற்கிடையே கடந்த ஜனவரி 5ம் தேதி ஊரிலுள்ள பூசாரி ஒருவர் ஆலமரத்தில் ஒரு பெண் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். பிறகு வந்த அந்த பெண்ணின் பாட்டனார் பெண்ணை அடையாளம் கண்டுள்ளார்.
FIR பதிவு செய்யவே போராட்டம்:
பெண்ணின் உடல் அகமதாபாத் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது . ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் மோடாசா காவல் நிலைய ஆய்வாளர் என்.கே. ரபாரி பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெண்வீட்டார் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். FIR பதிவு செய்யவே பெரும் போராட்டம் செய்துள்ளனர் தலித் சமூக மக்கள்.
பிறகு ஜனவரி ஏழாம் தேதி பெண்ணின் பாட்டனார் காவல்நிலையத்தில் பிமல் பார்வத், தர்ஷன் பர்வாட், சதீஷ் பர்வாட் மற்றும் ஜிகர் ஆகியோர் மீது கும்பல் பாலியல் வன்முறை மற்றும் கொலை குற்றம் சுமத்தி முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்தார். அதன் பிறகே பெண்ணின் உடலை பாட்டனார் பெற்று கொண்டார்.
விசாரணைக்கு உத்தரவு:
குஜராத்தில் உள்ள எஸ்சி / எஸ்டி கலத்தின் கூடுதல் டிஜிபி (ஏடிஜிபி) கே.கே.ஓஜா, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும் இந்த விஷயத்தில் காவல்துறையினரின் கவனக்குறைவு நடைபெற்றதா என்று நாங்கள் துறை ரீதியான விசாரணையைத் தொடங்கியுள்ளோம் என்று ஓஜா கூறினார்.
ஹாஷ்டாக் ட்ரெண்டிங் :
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் சம்பவம் குறித்து டிஜிட்டல் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனையடுத்து #JusticeForKajal என்ற ஹாஷ்டாக் இந்திய அளவில் முதலாவதாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.