புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்திலுள்ள செரியலூரினம் எனும் கிராமத்தில் தான் இந்த புரட்சி ஏற்பட்டுள்ளது. கிராம்ப்பஞ்சாயத்து தலைவராக அவ்வூரை சேர்ந்த ஜியாவுதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்துக்கள் பெரும்பான்மையினராக வாழும் அந்த கிராமத்தில் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமகன் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இந்த முடிவினை எடுத்ததாக அறிவிக்கிறார் உள்ளூர்வாசியான சி.ராஜகோபால்.
எங்கள் ஊரிலும்சுற்றி உள்ள மற்ற ஊர்களிலும் இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான கிராமப் பஞ்சாயத்து தலைவர்களுக்கான பதவிகள் ஏலம் விடப்பட்டன, சுமார் ரூ.10 லட்சம் வரையிலும் ஏலம் விட்டு அந்த பதவிகளை பெற்றுவந்த மற்ற ஊர்வாசிகளுக்கு மத்தியில் எங்களுக்கு அப்படியான ஒரு திட்டம் இல்லாதிருந்தது. பதவியை ஏலம் எடுத்து வருவோரால் ஊர் மக்களுக்கு ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை என நாங்கள் அறிந்தே வைத்திருந்தோம்.
முத்தரையர் , வெள்ளாளர் ஆகியோர் கணிசமான அளவிலும், சிறிய அளவில் எஸ்சி சமூகத்தினரும் வாழும் இப்பகுதியில் அச்சமூகத்தை சேர்ந்த சங்கர் என்பவர் உட்பட ஐந்து பேர் போட்டியிட்டனர். அவர்களில் நாங்கள் முகமது ஜியாவுதீன் (வயது 45) அவரையே தேர்ந்தெடுத்தோம், 1,360 வாக்குகள் உள்ள இடத்தில் 60 வாக்குகளே முஸ்லிம் ஓட்டுகள் எனினும் அவர் 554 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருடன் போட்டியிட்ட சங்கர் , அவரை விட 17 வாக்குகள் குறைவாகப்பெற்றார். முன்னதாக மழை,வெள்ளம் ஏற்பட்டு மக்கள் கஷ்டப்பட்ட சமயங்களில் தாமாக முன்வந்து உதவிகள் பல செய்தவர் ஜியாவுதீன், ஆகவே மோடி அரசு மக்களை பிரிக்கும் நோக்கில் கொண்டு வந்த சிஏஏ வை எதிர்க்கும் நோக்கத்திலும் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தும் விதத்திலும் நாங்கள் அவரை வெற்றிப்பெறச் செய்தோம் என்கிறார் ராஜகோபால், கிராம மக்கள் சார்பில்.