டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளவர் சூர்யா ராஜப்பன். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். உள்துறை அமைச்சர் அமித்ஷா CAA சட்டத்தினை ஆதரித்து வீடுவீடாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் சூர்யாவின் அபார்ட்மென்ட் அருகே அமித்ஷா பிரச்சாரத்திற்காக வந்துள்ளார். அப்போது சூர்யா மற்றும் அவரது தோழியும் அமித்ஷா முன்னால் We RejectCAA என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் அபார்ட்மெண்டில் இருந்து காலி செய்துள்ளார் அபார்ட்மெண்ட் உரிமையாளர்.
ஜனநாயக முறையில் கோஷம்:
அமித் ஷா வந்து கொண்டிருப்பது எங்களுக்கு தெரிய வந்தது. உடனே நாங்கள் CAA மற்றும் NRC கான எதிர்ப்பை அவர் முன்னரே தெரிவிப்பது என முடிவு செய்தோம். அதற்கேற்ப CAA மற்றும் NRC க்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேனர் ஒன்றை தயாரித்தோம். எங்கள் எதிர்ப்பை குரல் மூலமாகவும் தெரிவித்தோம். ஒரு வேளை அவ்வாறு நான் செய்திருக்க வில்லை என்றால் எனது மன சாட்சியே என்னை கொன்றிருக்கும். என்கிறார் வழக்கறிஞர் சூர்யா.
வழக்கறிஞர் சூர்யா மற்றும் அவரது தோழியை மிரட்டிய கும்பல்:
இவ்வாறு செய்தது தான் தாமதம், உடனே அமித்ஷா வுடன் இருந்த கூட்டத்தில் சுமார் 150 பேர் எங்கள் வீட்டின் முன் ஒன்று கூடினர். மாடியில் தொங்க விடபட்டிருந்த எங்கள் பேனரையும் அவர்கள் கிழித்து எறிந்தனர். பிறகு சிறிது நேரத்தில் வீட்டின் முன் நின்றவர்கள் எங்கள் வீட்டினுள் நுழைய முற்பட்டனர். உடனே நாங்கள் சென்று வீட்டின் கதவை பூட்டி விட்டோம். அவர்கள் வீட்டின் கதவை திறக்குமாறு சப்தமாக தட்டி கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் திறக்கவில்லை. இந்த கூட்டத்தில் எங்கள் அடுக்குமாடி கட்டிடத்தின் உரிமையாளரும் அடங்குவார்.
7 மணி நேரம் சிறைபிடிப்பு:
நாங்கள் கதவை திறக்காததால் வீட்டு உரிமையாளர் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறாதவாறு மாடிப்படி வழியை அடைத்து விட்டார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் இந்த நிலையிலியே நாங்கள் இருந்தோம், எனது நண்பர்களுக்கு போன் செய்து வந்து உதவுமாறு அழைத்தேன். அவர்களும் வந்தனர். ஆனால் அவர்களையும் அந்த கும்பல் மேலே வர அனுமதிக்கவில்லை. எனது நண்பர்களை தாக்கவும் அவர்கள் முற்பட்டனர்.
பிறகு எனது தந்தை போலீசாருடன் வந்து எங்களை காப்பாற்றி அழைத்து சென்றார். நாட்டில் ஜனநாயக முறையில் போராட்டம் செய்தால் இப்படியா செய்வது? இது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம் என்கிறார் சூர்யா.
அடுக்குமாடி உரிமையாளர் அநியாயம்:
மேலும் 2 பெண்களையும் வீட்டை ஏன் காலி செய்ய சொன்னீர்கள் என்று அடுக்குமாடி வீட்டின் உரிமையாளரிடம் கேட்கப்பட்டதற்கு நான் முதலில் அவர்களை வீட்டில் வாடகைக்கு அனுமதித்திருக்கவே கூடாது என்று பதில் கூறியுள்ளார். வீட்டின் லீஸ் இன்னும் முடிவடையாத நிலையில் அவர் பலவந்தமாக காலி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வழக்கறிஞர் சூர்யா வீட்டின் முன் கூடி அவர்களை மிரட்டிய கும்பல் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: TNM