‘வீர் சாவர்க்கர் கிட்னே வீர்? (வீர் சாவர்க்கர், எவ்வளவு தைரியமானவர்?) என்று பெயரில் கையேடு ஒன்று வியாழக்கிழமை மத்திய பிரதேசின் போபால், பைராகரில் காங்கிரஸ் சேவா தளம் அமைப்பின் தேசிய பயிற்சி முகாமின் தொடக்க விழாவின் போது தொண்டர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
‘கோட்ஸே- சாவர்க்கர் ஓரின சேர்க்கையாளர்கள்’:
பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லாரி காலின்ஸ் மற்றும் டொமினிக் லேபியர் ஆகியோரின் புகழ்பெற்ற நூலான ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற புத்தகத்தை ஆதாரமாக (பக்கம் 423) மேற்கோள்காட்டி சாவர்க்கர் கோட்ஸே இருவரும் ஓரினசேர்கையாளர்கள் என சேவா தளம் வெளியிட்ட கேயேட்டில் கூறப்பட்டுள்ளது .
“கோட்ஸே பிரம்மச்சாரி வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் முன்னர் சாவர்க்கருடன் உடல் ரீதியான உறவை கொண்டிருந்தார். கோட்ஸே தனது அரசியல் வழிகாட்டியான வீர் சாவர்க்கருடன் ஓரினச்சேர்க்கை உறவை கொண்டிருந்தார்” என மேற்சொன்ன புத்தகத்தை மேற்கோள் காட்டி சேவா தளம் வெளியிட்ட கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
“சிறுபான்மை பெண்கள் கற்பழிப்பு, பிரிவினைவாதம்” :
சிறுபான்மை சமூக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய சாவர்க்கர் தனது ஆதரவாளர்களை ஊக்குவித்ததாகவும், அவருக்கு 12 வயதாக இருந்தபோதே மசூதிகளின் மீது கற்களை வீசியதாகவும் அந்த கையேட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சாவர்க்கரும் அவரது நண்பர்களும் வகுப்புவாத கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பற்றி அறிந்த போதெல்லாம் மகிழ்ச்சியுடன் நடனமாடுவார்கள் என்றும் பிரிவினையின் விதைகளை தூவி சாவர்க்கர் இரு தேசக் கோட்பாட்டைக் கொண்டு வந்ததாகவும் அந்த கையேட்டில் சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
‘ஹிட்லரும் முசோலினியும் தான் இவர்களுக்கு முன் உதாரணம்’:
இரண்டாவது கையேட்டில், ‘ஆர்.எஸ்.எஸ் அவுர் பிஜேபி, குச் தத்யா அவுர் ஜான்காரி’ (ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி, சில உண்மை தகவல்கள்)’ ஆரம்பத்தில் இருந்தே இந்த அமைப்பு பாசிசம் மற்றும் நாசிசத்திலிருந்து உத்வேகம் பெற்றது என்று கூறபட்டுளளது.
1930 மற்றும் 1940 களின் சர்வாதிகாரிகளான ஹிட்லர் மற்றும் முசோலினி உட்பட பல புகழ்பெற்ற சர்வாதிகாரிகளை உதாரண புருஷர்களாக கொண்டு தான் ஆர்.எஸ்.எஸ் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்துத்துவ அமைப்புகள், பாஜக கண்டனம் :
இவ்வாறான செய்திகளை கொண்ட கேயெடு விநியோகிப்பட்டதும் இந்துத்துவ பட்டாளம் சேவா தளத்தை எதிர்த்து கண்டனங்களை தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு ஜோதிராதித்யா சிந்தியாவுடன் ஓரினச்சேர்க்கை உள்ளது எனவும் தன் பங்குக்கு அகில் பாரதிய இந்து மகாசபா தலைவர் சுவாமி சக்ரபாணி கருத்து தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா பாஜக முன்னாள் முதல்வர் தேவிந்தரா பட்னாவிஸ் இந்த கையேட்டை தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சாவர்க்கர் வாரிசு கருத்து:
சாவர்க்கர் மீது அவதூறு சுமத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் எனவும் அவர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நாட்டில் அராஜகத்தை பரப்ப காங்கிரஸ் கட்சி சதி செய்து வருகிறது. காங்கிரஸ் சேவா தளம் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சாவர்க்கரின் வாரிசான ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதற்கெல்லாம் அசராத காங்கிரஸ் சேவாதல் தேசியத் தலைவர் லால்ஜி தேசாய் கையேட்டில் கூறப்பட்டுள்ளவை, உண்மைகளை, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்று மறுப்பு கூறியுள்ளார். மேலும் “பாஜகவால் ஹீரோக்களாக முன்வைக்கப்படும் தலைவர்களின் யதார்த்தத்தை பொதுமக்கள் அறிந்து கொள்வது முக்கியம்” என்றும் தேசாய் கூறியுள்ளார்.