இந்திய அரசியல் சாசனம் காப்பாற்றபட வேண்டும், சகலவிதமான சமயத்து மக்களுக்கும் குடியுரிமை பாதிக்கப்பட கூடாது என்கிற நற்சிந்தனையில் இருப்பவர்கள் அனைவரும் நாடு முழுக்க ஒன்றிணைந்து மத அடிப்படை கொண்ட குடியுரிமை சட்டம், என்ஆர்சி என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இது இங்குள்ள அனைவரும் நினைப்பது போல வெறும் முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல. இந்த பிரச்சனைக்காக அதிகம் குரலெழுப்ப கூடியவர்களாக முஸ்லிம்கள் வந்து முன்னிற்பதால் உங்களுக்கு அப்படி காட்டப்படுகிறது. இந்தியாவில் முஸ்லிம்கள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 14.23% பேர் அதாவது ஏறக்குறைய 21 கோடி முஸ்லிம்கள் ( அரசின் கணக்குப்படி 14.9% பேர் தான்.) இந்தியாவில் இந்துக்களின் மக்கள்தொகை 79.82% பேர் , இதில் பிராமணர்கள் 4.3% பேர் (ஆறுகோடியே நால்பத்திஎட்டு லட்சம் பேர் மட்டுமே) உள்ளனர். பிராமணர் தவிர்த்துள்ள இந்துக்களின் எண்ணிக்கை 73% பேர் தான். ( கலப்புத்திருமணம் செய்துகொண்டோரில் பலர் தங்களையும் தங்களது குழந்தைகளையும் எதில் சேர்ப்பது என்று தெரியாமல் குழம்பி நிற்கின்றனர்)
மற்றபடி இந்தியாவில் கிறுஸ்தவர்கள் 2.34%, சீக்கியர் 1.75%, பௌத்தர் 0.77%, ஜைனர் 0.48%, பார்சிக்கள் 0.1% பேர்… இவர்களெல்லாம் குடியுரிமை பட்டியலில் வரும்போது இந்திய முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையான சமூகமாக இருந்தும் NRCயை ஏவி நேரடியாக எதற்காக தாக்கப்பட வேண்டும்.?
இந்தியாவில் சான்றிதழ்களில் தங்களை இந்து என குறிப்பிடுவோரில் பலரும் ஏதோ ஒப்புக்காகத்தான் இணைத்து வைத்திருப்பார்கள். பலர் தங்களது மதம் இன்னது என குறிப்பிடாமலே வைத்திருப்பார்கள், பலர் தங்களுக்கு மதமே இல்லை என கூறும் நாத்திகர்களும் இருக்கிறார்கள், தலித்துகளில் பலரும் தங்களை மதமற்றவர்களாகவே சான்றிதழ்களில் அடையாளப்படுத்துகிறார்கள். கர்நாடகத்தில் கடந்த ஆண்டு தங்களை லிங்காயத்துகள் என தனியாக அடையாளப்படுத்திக் கொண்டோரும் இதில் பாதிப்படைய போகிறார்கள்.
தென்னிந்தியாவை போல அல்ல வடயிந்தியா, அங்கே ஜைனம், பௌத்தம் போல இன்னும் பல ஸ்ராமண மதங்கள் உண்டு, அவர்களுக்கான தனி கோவில்களும் கோடிகளும் உண்டு, மிக மிக நுண்ணிய அளவில் 4,000-5,000 பேர்கள் மட்டும் வழிபடும் மதங்கள் இருக்கின்றன, அவர்களெல்லாம் சாதி அல்லது கம்யூனிட்டி சான்றிதழில் தங்களை இந்து என அடையாளப்படுத்திக்கொள்ளவே மாட்டார்கள், இன்னும் கூட நம் தமிழகத்தில் சில சைவர்கள் தங்களை சைவ மதம் என்று குறிப்பிடுவார்களே தவிர இந்து என குறிக்கமாட்டார்கள், இந்தியா ஏற்றுள்ள இந்துமதம் எது, அதில் யார் யார் சேர்க்கப்படுவார் சேர்க்கப்படமாட்டார் என தெரியாமலே சிலர் தங்களை இந்து என அடையாளப்படுத்திக்கொள்வது வேடிக்கையானது.
பொதுவாக கிராம தேவதை வணங்கும் மலைவாழ் மக்களுக்கு இந்துமதம் என்றால் என்னவென்றே தெரியாது.0.% அளவில் கூட இல்லாதவர்களான படேல், ஜாட், வங்காளத்தின் புவால், மனிப்பூரின் மைத்தி மக்களுடைய சனாமஹி சமயம், பிரம்மகுமாரிகள்,பிஹாரில் ஆனந்த மார்க்கத்தினர், பஹாய், கேரள-கோவாவின் யூதர்கள், அஜீவகத்தினர் (ஆசீவகம்) இவர்களும் இந்த NRC பட்டியலில் பாதிக்கப்பட போகிறவர்கள் தான்.
அது போக இந்தியாவில் அறியப்பட்ட சமயங்களில் இந்து,முஸ்லிம், கிறுஸ்தவ, ஜைன,பௌத்த,சீக்கிய,பார்சிகளை விட 0.7% பேர் அதாவது இந்திய ஜனத்தொகையில் மொத்தம் ஒரு 9% பேருக்கு தனித்தனி பெயர்குறிப்பிடப்படாத அல்லது பெரியளவில் அறியப்படாத குட்டி குட்டி மதங்கள் உண்டு, அவர்களுக்கும் இது பிரச்சனை தான். பழங்குடிகள் பலருக்கு இந்தியாவில் தாங்கள் ஒரு குடியாட்சியில் வாழ்கிறோம் என்பதே தெரியாது.
இந்த அளவிற்கு பிரச்சினை தீவிரமாக இருக்கும்போது இது வெறும் முஸ்லிம்களுக்கான போராட்டமாக அடையாளப்படுத்துவது மடமைத்தனமானது.
ஆக்கம் : நஸ்ரத் (The views are personal)