முஸ்லிம்கள் மீது தொடரும் யோகியின் பழிவாங்கும் படலம்?
முஸாஃபர்நகரில் மரக்கடை வியாபாரம் நடத்தி வருபவர் 72 வயது ஹாஜி ஹமீத் ஹஸன். கடந்த வெள்ளியன்று அவரது வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர் உபி போலீசார். இரவு 11 மணியளவில் , 8 வயது பேரனுடன் உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு வாயிலில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புத்தட்டியுள்ளது. படுக்கையைவிட்டு எழுந்து பார்த்த போது 30 போலீசார், யூனிபார்மிலும் , மஃப்டியிலுமாக நின்று வீட்டின் கேட்டை உடைத்து , பெரிய சுத்தியலை கொண்டு வாசற்கதவையும் உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
வீட்டில் புகுந்து கண்ணில்பட்ட பொருட்களையல்லாம் அடித்து சேதம் செய்தவர்கள், ரைஃபிளின் பின்புறத்தை வைத்து ஹமீத் ஹஸன் அவர்களையும் இடித்து கீழே தள்ளினர். டிவி,பிரிட்ஜ், வாசிங் மெசின், வாஷ்பேசின் மற்றும் சமையலறை பொருட்களை உடைத்து நாசம் செய்தவர்களின் காலை பிடித்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை, ” நீ ஒன்று பாகிஸ்தான் போ அல்லது கபருஸ்தான் போ” என வெறுப்பு சொற்களை கூறியவாறு வெறித்தனமாக என்னை தாக்கினார்கள்.
இதை கண்ட அவரது மனைவி பாத்திமா, அவர்களது 2 வயது வந்த பேத்திகள் ருகைய்யா மற்றும் முபஷிரா ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டுள்ளார்.
கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் வரை நீடித்த இந்த தாக்குதலில் இறுதியாக அவர்களது அலமாரியை உடைத்து நகைகளையும், ஐந்து லட்சம் பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.
வருகிற ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி பேத்தி ஒருவருக்கு திருமணம் வைத்திருப்பதாகவும் , அதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் நகையையும் அவர்கள் வீடுபுகுந்து எடுத்துச்சென்றுள்ளதை சுட்டிக்காட்டி மனமுடைந்து அழுகிறார் அந்த பெரியவர், பேத்தியின் திருமண பத்திரைகையை கையில் ஏந்தியபடியே.
இந்நிலையில் அவரது மகன் முகமது ஷாகித்தையும் அடித்து இழுத்துச்சென்றுவிட்டனர் காவி போலிஸார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது அங்கே புகாரை ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல், நீ புகார் கூறி வந்தால் உன் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்வோம் என்றனர் போலீசார், மேல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள உதவுமாறு நான் கேட்டதற்கு என்னை நோக்கி தகாத வார்த்தைகளை கொண்டு ஏசி பேசி என்னை பிடித்து தள்ளி விட்டனர் போலீசார்.
எனவே உபி டிஜிபி ஒ.பி.சிங் என்பவரிடம் தகவல் தெரிவிக்க அவரை தொடர்பு கொண்டபோது, அவருடைய பணியாள் ஒருவர் போனை எடுத்துக்கொண்டு, அவர் பிசியாக இருப்பதாகவும் பிரச்சனையை கூறினால் தாம் கூறிவிடுவதாகவும் கூறி போனை துண்டித்தார் என்கிறார் ஹஸன்.
சுதந்திர போருக்குப்பின் ஜின்னா உருவாக்கிய பாகிஸ்தான் வேண்டாம், காந்தி உருவாக்கிய இந்துஸ்தான் தான் வேண்டும் என கூறி இங்கேயே தங்கிவிட்டவர் எனது தந்தை. ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ என பெண்களுக்காக அக்கறை செலுத்துவதாக கூறும் மோடி அரசு இப்போது எங்களை என்ன கதிக்கு ஆளாக்கியுள்ளது.
எனது பேத்தியின் திருமணப்பரிசாக அவளுக்கு நாங்கள் வாங்கி வைத்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி யோகி ஆதித்யநாத் அரசு எங்களை பழிவாங்கி விட்டது. கலவரம் நிகழ்ந்தப்பட்ட அன்று எல்லா மஹல்லாக்களிலும் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாங்கள் குடியுரிமை சட்டத்தினை எதிர்த்து அமைதி பேரணி தான் நடத்தினோம், ஆனால் பேரணியில் கலந்துகொண்ட அனைவரது வீடுகளையும் குறித்து வைத்து இப்படி அர்த்தராத்திரியில் கலவரம் செய்வது என்ன நியாயம் என்கிறார் கண்ணீரோடு.
ஹஸன் அவர்களது வீட்டில் மட்டுமல்லாது முன்னாள் காங்கிரஸ் எம்பி ஸைதுஜ்ஜமான் அவர்களது பண்ணைவீட்டில் நின்றிருந்த அவரது நான்கு கார்களையும் தீயிட்டு கொளுத்திச்சென்றுள்ளனர் காவி போலீஸ் படையினர். அதுபற்றி ஸைதுஜ்ஜமானின் மகன் சல்மான் கூறியபோது, போலீசாரில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் கலந்திருப்பது்தான் வேதனையாக உள்ளது. அவர்களில் பலர் யூனிபார்ம் அணியாதவர்கள் , அவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினை சேர்ந்தவர்கள் என்பதற்கு சாட்சி எனது வாயிற்காவலர் பரத்ராம் ஆவார்.
சல்மான் இதுபற்றி போலீசில் கூற சென்றபோது அவரை காவல் நிலையத்தை விட்டு இறங்கும்படி தள்ளிவிட்டுள்ளனர், அலி அக்பர் என்பவரது வீட்டையும் சூறையாடிய அந்த போலீஸ்கும்பல் சல்மானின் பண்ணைவீட்டில் இருக்கும் குதிரையையும் அடித்து காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
ஹஸன் அவர்களது மகன் ஷாஹித்தின் கைகளில் துப்பாக்கியை கொடுத்து போலீசார் படம்பிடித்துள்ளனர்.
19 வயது ஷன்னு என்ற பெண்ணின் கணவர் நூர் முகமது என்பவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். ஷன்னு ஏழு மாத கர்ப்பிணியும் ஒன்றரை வயது குழந்தையின் தாயுமாவார் , போலீசார் சுட்டதில் இறந்துபோன நூர் முகமதுவை உள்ளூரில் அடக்கம்செய்ய விடாமல் மீரட்வரை கொண்டு சென்று அடக்கும்படி எங்களை விரட்டியடித்தனர் என்கிறார் அவரது சகோதரர் உமர்.
போலீசாரை கொண்டு யோகி நடத்திய கலவரங்கள் அனைத்தும் இந்து-முஸ்லிம் பிரச்சனையை உருவாக்கிவிடவே என நன்றாக தெரிகிறது.
இதுபற்றி உண்மைகளை போட்டுடைக்கும் சமூக ஆர்வலரான ரேஹான் கான் கூறுகையில், யோகி அரசின் முஸ்லிம்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைக்கான ஆதாரங்களாக வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் மாட்டியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளே சாட்சி என்கிறார். முஸ்லிம்கள் நடத்திய அமைதிப்பேரணியில் ஆர்எஸ்எஸ்காரர்கள் முகத்தை மூடிக்கொண்டு கல்லெறிந்துவிட்டு ஓடியதும் அதில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் எல்லா இடங்களிலும் நடக்கும் போராட்டங்கள் யாவும் அமைதியாக இருக்கும்பட்சத்தில் உபியில் மட்டும் தீவிர கலவரங்கள் வெடிப்பது ஏன்? என அவர் கேள்வியெழுப்புகிறார்.
பிஜ்னோர், கான்பூர், மீரட் போன்ற இடங்களிலும் இதே போன்றதான சூறையாடல்கள் முஸ்லிம் வீடுகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.