(PTI photo) ‘CAA வேறு NRC வேறு ப்ரோ. இதை இரண்டையும் இணைப்பது தவறு. அப்படி செய்ய முனையும் சிலர் கற்பனையான கதைகளை சொல்லி உங்களை பயமுறுத்துகிறார்கள்.’
இந்த மாதிரி நிறைய கமெண்டுகள், சில பதிவுகளை நம்மால் காண முடியும். ஆனால் உண்மை நிலவரம் என்ன தெரியுமா?
முதலில் சிஏஏ மற்றும் என்ஆர்சியை இணைத்து பேசியது அமித் ஷா. அதற்குப்பின் பலமுறை, பல இடங்களில் பேசி இருக்கிறார். அது இந்தியில் இருந்ததால் நிறைய பேருக்கு புரியவில்லை.
அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ :
‘நாம் Citizenship Amendment Bill கொண்டு வர இருக்கிறோம். இதன்படி அண்டை நாடுகளில் இருந்து வரும் இந்து, சீக்கிய, கிறித்துவ, பௌத்த, சமண அகதிகளுக்கு இங்கே குடியுரிமை கொடுத்து பாரதத்தின் குடிமகன்களாக ஆக்குவோம். மரியாதையை எதிர்பார்த்து நிற்பவர்களுக்கு மோடி அரசு அந்த மரியாதையை வழங்கும். பாரதத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த மரியாதை கிட்டும்.
முதலில் CABயைக்கொண்டு இந்து, சீக்கிய, கிறித்துவ, பௌத்த, சமண அகதிகளுக்கு குடியுரிமை கொடுப்போம். அதற்குப்பின் நாம் NRCயை அமுலுக்கு கொண்டு வருவோம். நீங்களே சொல்லுங்கள். இங்கே ஊடுருவி இருக்கிறார்களே, இவர்களை துரத்த வேண்டுமா வேண்டாமா? (‘ஆமாம்’ என்று கூட்டம் கோஷமிடுகிறது.) அவர்களை எல்லாம் துரத்த வேண்டுமா வேண்டாமா? (ஆமாம், ஆமாம்)
எனவே, பாரதிய ஜனதா கட்சியின் அரசு முதலில் வந்திருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்கும். அதற்குப்பின் கஷ்மீரில் இருந்து கன்னியாகுமாரி வரை, அஸ்ஸாமில் இருந்து குஜராத் வரை ஊடுருவி இருக்கும் ஒவ்வொருவரையும் தேடித்தேடி துரத்தி அடிக்கும் வேலையை இந்த பாஜக அரசு மேற்கொள்ளும். இந்த ஊடுருவர்கள் கரையான்களைப்போல இந்த தேசத்தை உறிஞ்சி வருகிறார்கள். இந்த மம்தா பானர்ஜி அரசோ இந்த ஊடுருவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து இருப்பதற்கு காரணம் அவர்கள் இவர்களுக்கு வாக்கு வங்கியாக இருப்பதுதான். ஆனால் நமக்கோ தேர்தல் வெற்றியெல்லாம் முக்கியமல்ல. வாக்கு வங்கியெல்லாம் முக்கியமல்ல. நமக்கு தேசப்பாதுகாப்புதான் முக்கியம், தேசப்பாதுகாப்புதான் முக்கியம்.’
இந்தப்பேச்சில் CAA வையும் NRCயையும் தெளிவாக இணைக்கும் முயற்சியை தாண்டி கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், அவர் பயன்படுத்தும் வார்த்தைகள்தான். இந்து, கிறித்துவ, சீக்கிய பௌத்த, சமண மக்களை குறிப்பிடும் பொழுது ‘ஷரணார்த்தி’ என்ற பதத்தை பயன்படுத்துகிறார். அதற்கு ‘அகதிகள்’ அல்லது ‘தஞ்சம் வேண்டுவோர்’ என்று பொருள். அதற்குப்பின் இவர்கள் அல்லாத மக்களை, அதாவது முஸ்லிம்களை, குறிப்பிடும் பொழுது ‘குஸ்பேட்டியா’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். இதன் அர்த்தம் ‘ஊடுருவி இருப்பவர்கள்’. ஆங்கிலத்தில் ‘Infiltrators’ என்று சொல்லலாம். சிலர் இதற்கு ‘illegal immigrants’தான் அர்த்தம் என்று சொல்லக்கூடும். ஆனால் அதற்கு சரியான இந்திப்பதம் ‘ அவைத் ஆப்ரவாசி’ (अवैध आप्रवासि)
அதாவது இஸ்லாமிய மதத்தினர் கண்ணியமற்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர். இதர மதத்தவர் கண்ணியமிக்க சொல்லால் மதிப்புடன் அழைக்கப்படுகின்றனர்.
இது ஒரு சோற்றுப்பதம்தான். இது போல அவர் பேசிய பல்வேறு வீடியோக்கள் இருக்கின்றன.
ஆக்கம் : ஸ்ரீதர் சுப்ரமணியம் (சிறிய மாறுதல்களுடன்)