ஜிஎஸ்டி வரிகளை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் உணவுப் பொருட்கள், ஆடைகள், விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் விரைவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என நினைத்த பாஜக அரசின் நினைப்பில் விழுந்தது மண்.
கடந்த 2017ம் ஜூலை முதல் ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுக்கு சராசரியாக 14.4 சதவீத வருவாய் கிடைத்து வந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக 11.6 சதவீதமாக குறைந்திருப்பதால் அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டுள்ளது. இதனால் ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு வழங்கும் 13 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மாதாந்திர இழப்பீடு தொகை மத்திய அரசுக்கு சுமையாக இருந்து வருகிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்ட ஜிஎஸ்டி வரிகளை உயத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி அடிப்படையான 5 சதவீத வரி இனி பத்து சதவீதமாக உயர்த்தப்படும். தற்போது 243 பொருட்களுக்கு வசூலிக்கப்படும் 12 சதவீத வரி இனி 18 சதவீத வரையறைக்குள் கொண்டு வரப்படும். வரி உயர்த்தப்பட்டால் மாவு வகைகள், பன்னீர், பருப்பு வகைகள், பாமாயில், பிசா , உலர் பழங்கள், போன்ற உணவுப் பொருட்களின் விலை உயரும். அதே போல் உணவகங்களில் கட்டணம் அதிகமாகும். முதல் வகுப்பு ரயில் விமான கட்டணங்களும் உயரக்கூடும். பட்டு, லினன் துணிகள், ஆண்களின் கோட்டு சூட்டுகள், சுற்றுலா சேவைகள், மொபைல் போன்கள் போன்ற பல்வேறு பொருட்களின் மீதான வரி இருமடங்காக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்றாலும் மத்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
வரிவிலக்கு அளிக்கப்பட்டு வரும் சில பொருட்களுக்கு வரிவிதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட ஓட்டல்களில் தங்குவது போன்றவற்றுக்கு இனி வரி செலுத்த வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018-19 ஆம் ஆண்டிற்கான மாநிலங்கள் / யூ.டி.க்களின் மொத்த ஜி.எஸ்.டி வசூல் 5,18,447 கோடியாக இருந்தது. அந்த ஆண்டில் மாநிலங்களுக்கு இழப்பீடாக 81,177 கோடி ரூபாயை மத்திய அரசு வெளியிட்டது. ஜூலை வரை அரசு 27,955 கோடி ரூபாயை முதற்கட்ட இழப்பீடாக அறிவித்தும் அதனை கொடுக்கவியலாத நிலையில் அதன் சொந்த மதிப்பீடுகளின்படி, செப்டம்பர் இறுதி வரை மேலும் 40,000 கோடி ரூபாய் மத்திய அரசின் கணக்கில் கூட்டப்பட்டுள்ளது. . மொத்த ஜிஎஸ்டி வசூல் ஏப்ரல் முதல் நவம்பர் வரை (சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி உட்பட) `8.05 லட்சம் கோடியாக இருந்தது, இது 1 லட்சம் கோடிக்கு மேல் பற்றாக்குறையை குறிக்கிறது.
கடந்த வாரம், டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி மற்றும் மத்திய பிரதேசத்தின் நிதி அமைச்சர்கள் மற்றும் கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, ஜிஎஸ்டி இழப்பீட்டு பரிமாற்றத்தின் தாமதம் அவர்களை கடுமையான நிதி நிலைக்கு தள்ளியுள்ளது என்றனர். ஜிஎஸ்டி அமலாக்கத்தின் போது, 14 வது நிதி ஆணையத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் முன்கணிப்பை முன்னறிவிப்பதற்கான எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததால் வரி அனுமானம் யதார்த்தமானதாக இல்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்து அடுத்த வாரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த உள்ளது. இதையடுத்து வரிவிதிப்பில் மாற்றங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.