Dalits Tamil Nadu

மேட்டுப்பாளையத்தில் உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய்! – திருமாவளவன் கண்டன அறிக்கை!

மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியில் சுவர் இடிந்து 17 பேர் மரணம்- உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளியைக் கைதுசெய் ! உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்!
~~~~~~~
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏடி காலனியைச் சேர்ந்த தலித் மக்கள் 17 பேர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர்.

இதற்குக் காரணமான சிவசுப்பிரமணியன் என்பவரை உடனடியாக எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்; உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். உயிரிழப்புகளுக்கு நியாயம் கேட்டுப் போராடிய மக்கள்மீது தடியடி நடத்திய அதிமுக அரசின் காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேட்டுப்பாளையத்தில் சக்கரவர்த்தி துகில் மாளிகை என்ற துணிக்கடையை நடத்திவரும் சிவசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டைச்சுற்றி 20 அடி உயரத்துக்கு 80 அடி நீளத்துக்கு கருங்கற்களால் சுவர் எழுப்பியுள்ளார். அது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அந்தச் சுவரை அகற்ற வேண்டும் என்று பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் பெய்த கன மழையில் இந்த சுவர் இடிந்து விழுந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர். அவர்களது மரணத்துக்குக் காரணமான சிவசுப்ரமணியம் என்பவரைக் கைது செய்ய வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் நடத்தியவர்களை அதிமுக அரசின் போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது கடுமையான கண்டனத்துக்கு உரியது.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இந்தத் தொகை போதுமானதல்ல, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் ; அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; அந்தப் பகுதியில் வாழும் தலித் மக்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர வேண்டும்; இவர்களது உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியம் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றுமாறு தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

உயிரிழந்தவர்களுக்கு எமது அஞ்சலியையும் அவர்களது குடும்பத்தினருக்கு எமது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
தொல். திருமாவளவன்
நிறுவனர், தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.