Tamil Nadu

பெற்றோரை கைவிட்ட மகனிடமிருந்து ரூ.3 கோடி மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு !

கிருஷ்ணகிரியில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்ட மகனிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டு பெற்றோரிடமே ஒப்படைத்தார் வருவாய் கோட்டாட்சியர்.

கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரியசாமி கவுண்டர் தெருவில் வசித்து வருபவர் கிட்டு (எ) பெரியசாமி (67). இவர் வணிகவரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சகுந்தலா (60). இவர்களது மகன் அருண்குமார் (40). இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அருண் குமாருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டு செயல் இழந்த நிலையில், அவரது தாயார் சகுந்தலா தனது சிறுநீரகத்தை வழங்கி காப் பாற்றினார். மேலும், வீடு, கடைகள் உட்பட ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகளை அருண்குமாருக்கு பெற்றோர், தானமாக வழங்கினர். இதனைப் பெற்றுக்கொண்ட அருண்குமார், காலப்போக்கில் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றியதாக தெரிகிறது.

கிட்டு, மாத ஓய்வூதியமாக பெறும் ரூ.6 ஆயிரத்தை வைத்துக் கொண்டு மனைவியுடன் வறுமை யில் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அப் போதைய வருவாய் கோட்டாட்சியர் சரவணனிடம், முதியோர் பரா மரிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டத் தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க மனு அளித்தனர்.

விசாரணை நடத்திய வருவாய் கோட்டாட்சியர், பெற்றோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண் டும் என அருண்குமாருக்கு உத்தர விட்டார். இந்த தொகையை கடையில் வரும் வாடகையின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கூறியிருந்தார்.

ஆனால், அருண்குமார், தொகையை வழங்கவில்லை. இதனால் கிட்டு, அவரது மனைவி சகுந்தலா ஆகியோர் மாவட்ட ஆட்சி யர் பிரபாகரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கு மாறு ஆட்சியர், வருவாய் கோட்டாட் சியருக்கு உத்தரவிட்டார்.

தற்போதைய வருவாய் கோட் டாட்சியர் தெய்வநாயகி விசாரணை நடத்தி, பெற்றோரிடம் இருந்து அருண்குமார் தானமாக பெற்ற ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகளை மீண்டும் பெற்றோருக்கு வழங்க உத்தரவிட்டார். அதற்கான ஆவணங்களை வழங்கிய வருவாய் கோட்டாட்சியர், அருண்குமார் எக்காரணத்தை கொண்டும் தாய், தந்தையிடம் இருந்து மீண்டும் சொத்துகளை அபகரிக்கக் கூடாது. மீறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Courtesy:Hindutamil