சுதந்திர இந்தியாவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமலிருந்த பாபர் மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
எந்தவொரு வழக்கிலும் சட்டத்தின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்று தான் இந்திய அரசியல் சட்டம் கூறுகின்றது. அதையே உச்ச நீதிமன்றமும் வலியுறுத்துகிறது.
ஆனால் பாபர் மஸ்ஜித் தீர்ப்பில் அத்தகைய சட்ட அடிப்படை விதிகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டு ஐநூறு ஆண்டுகள் ஆகிவிட்டதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் அதே இடத்தில் கோவில் கட்டலாம் என்று அனுமதி வழங்கியது துளியும் ஏற்கும்படியாக இல்லை.
சட்டப்படி இந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தான் இங்கு பிரச்சனை. ஆவண மற்றும் அனுபவ பாத்தியதை அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய விஷயம் இது.
ஆனால் நம்பிக்கை அடிப்படையிலான பிரச்சனையாக உச்சநீதிமன்றம் இதை அணுகியுள்ளது.
பள்ளிவாசல் அமைந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையை கூறி பாபர் மஸ்ஜித் நிலம் ராமஜென்ப பூமி நியாஸ் அமைப்பினருக்கே என்பது சட்டத்தின் அடிப்படையிலான தீர்ப்பல்ல.
பெரும்பான்மை மக்களை திருப்தி கொள்ளச் செய்யும் நம்பிக்கை அடிப்படையிலான தீர்ப்பே ஆகும்.
பள்ளிவாசலை இடித்தது சட்ட விரோதம் என்ற உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்குரிய தண்டனையை பதிவு செய்யாமல் கடந்து சென்றதும் நியாயமாக தெரியவில்லை.
பாபர் மஸ்ஜித் நிலம் முழுவதும் தங்களுக்குரியது என்பதற்கான ஆவணங்களை சன்னி வக்பு வாரியம் ஒப்படைக்கவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிடுகின்றது.
எதிர்தரப்பாகிய ராமஜென்பூமி நியாஸ் அமைப்பினர் மட்டும் தங்களுக்குரியது என்பதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்களா? அவர்களிடம் மறைமுகமாக நிலத்தை வழங்கியது எந்த அடிப்படையில் நியாயம்?
பள்ளிவாசல் கட்டுவதற்கு இடம் இல்லை என்பதற்காக இந்த சட்டப் போராட்டத்தையும், அறப்போராட்டங்களையும் முஸ்லிம்கள் நடத்தவில்லை.
தங்களுக்கான உரிமை சட்டத்தின் படி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகாலமாக போராடினார்கள். ஆனால் அதை புரிந்து கொள்ளாத உச்சநீதிமன்றம் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று சொல்வது ஏமாற்றத்தை அளிக்கின்றது.
நாட்டு நன்மைக்காக எத்தனையோ இடங்களையும், உயிர்களையும் அர்ப்பணித்த இந்திய இஸ்லாமிய சமூகத்தின் தியாகங்கள் இதன் மூலம் கொச்சைப்படுத்துவதாகவே உணர்கிறோம்.
இந்த வழக்கில் முஸ்லிம்களின் தரப்பாக உள்ள சன்னி வக்பு வாரியம் தீர்ப்பை முழுமையாக வாசித்து பின்னர் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறி உள்ளது கவனித்தக்கது. அதை தொடர்ந்தே முஸ்லிம்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகள் அமையும்.
பாபரி மஸ்ஜித் பிரச்சனையை வைத்து இந்திய முஸ்லிம்களுக்கிடையே அரசியல் கட்சிகள் ஆதாயம் அடைந்து கொண்டிருந்த நிலை இனி தொடராது.
இந்திய இறையாண்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எடுத்துக் காட்டாக உள்ள இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான இத்தீர்ப்பிற்கு பிறகும் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாப்பார்கள்.
இப்படிக்கு,
இ. முஹம்மது ,
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.