Babri Masjid Indian Judiciary Muslims

‘பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை’ – NTF அறிக்கை!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF) மாநில பொதுச் செயலளர் ஏ.எஸ்.அலாவுதீன் வெளியிடும் அறிக்கை:

பாபர் மஸ்ஜித் குறித்த உச்சநீமன்றத்தின் தீர்ப்பு நீதியை நிலைநாட்டவில்லை.

உ.பி.மாநிலம், அயோத்தி பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அவர்கள் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் ஆவணம் என்ன சொல்கிறது என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டால் அது சட்டப்படியான தீர்ப்பு எனலாம். அல்லது யாருடைய அனுபோகத்தில் இருந்து வருகிறது என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அதுவும் சட்டப்படியான தீர்ப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்ய அதன் அடியில் தோண்டிப்பார்த்து அதில் என்ன உள்ளது என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்க உலகத்தில் எந்த நாட்டுச் சட்டத்திலும் இடமில்லை. பழமை வாய்ந்த டெல்லி செங்கோட்டையை தோண்டிப்பார்த்து அதனடியில் புத்தர் சிலை கிடைக்கப்பெற்றால் அந்த இடம் மத்திய அரசுக்கு சொந்தமானதல்ல ; புத்த விகாரத்திற்கு சொந்தமானது என்று சொல்ல முடியுமா?

சில நாட்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டடமாக இருந்து அது குறித்து வழக்கு வந்தால் அப்போது இது போல் செய்வதை சட்டத்தின் பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படலாம்.
450 ஆண்டு காலம் பள்ளிவாசலாக வழிபாட்டுத்தலமாக உள்ள ஒரு இடம் பற்றிய வழக்கில் தொல்லியல் துறை ஆய்வு சட்டத்திற்கு உட்பட்டதாகுமா?

மத நம்பிக்கையைக் கருத்தில் கொள்ளவில்லை என்று நீதிபதிகள் வாயால் சொன்னாலும், தீர்ப்பில் மத நம்பிக்கையே பிரதிபலிக்கிறது என்பதை அறிவுடைய மக்கள் உணர்வார்கள்.

முஸ்லிம்கள் எந்த இடத்திலும் தொழலாம் என்பதில் நீதிமன்றத்துக்கு என்ன அக்கறை? எந்த இடத்திலும் தொழலாம் என்றால் சொந்த இடத்தை பறித்துக் கொள்வது சட்டத்தின் பார்வையில் சரியானதா? உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தாதா? நாட்டில் உள்ள ஏனைய பல்லாயிரக்கணக்கான பள்ளிவாசல்களுக்கும் இந்த நிலையை ஏற்படுத்தும் வாசலை உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து திறந்து விட்டுள்ளது.

முஸ்லிம்கள் இரண்டரை ஏக்கர் நிலத்துக்காக போராடவில்லை. அது அல்லாஹ்வின் பழமையான ஆலயம். தங்களுக்கு உரிமையான சொத்து என்பதற்காகவே போராடினார்கள். இந்த உரிமைப் போராட்டத்திற்காக தான் பல்லாயிரம் முஸ்லிம் உயிர்கள் பலியாகியுள்ளது. 5 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து சரிகட்டும் விஷயமா இது?

இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் சமுதாயம் இழந்த உயிர்கள் அல்லாமல், பல்லாயிரம் கோடி சொத்துக்களையும் இழந்துள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக ஏராளமான பொருளாதாரத்தையும் இழந்துள்ளது. இப்போதும் கூட முஸ்லிம்களிடம் தலா 100 ரூபாய் திரட்டினால் கூட பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கி பாபரி பள்ளிவாசலை கட்ட முடியும். ஆனால் பிரச்சனை அதுவல்ல. இடம் யாருக்குரியது என்பதே பிரச்சனை

முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தபின், ஐந்து ஏக்கர் நிலத்தை கொடுக்க உத்தரவு போடுவது சட்டத்தின் பார்வையில் சரியா?

இந்த தீர்ப்பை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன. சட்டம் நீதியின் அடிப்படையில் அமையாத ஒரு தீர்ப்பை உலக நாடுகள் உணர்ந்தால்,இந்தியாவின் நீதி பரிபாலன முறையை எள்ளி நகையாடுவார்கள். இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு சட்டத்தின்படி நீதி வழங்கப்படுவதில்லை என்ற முடிவுக்கும் வருவார்கள்.

உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பின் இனி ஒன்றும் ஆகப்போவதில்லை என்ற விரக்தியில் தான் முஸ்லிம்கள் இத்தீர்ப்புக்கு எந்த இடையூறும் அளிக்காமல் அமைதி காக்கிறார்கள். இது அநீதியான தீர்ப்பு என்பது தான் முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வாகும். இப்படியும் ஒரு நாட்டில் நடக்குமா என்று வேதனை கலந்த வியப்புடன் இதைப் பார்க்கிறார்கள்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அல்லாஹ்வின் நீதி மன்றத்தில் இறைவா! எங்களுக்கு அநீதியிழைத்தவர்களைப் பார்த்துக் கொள்!! என்று முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்வார்கள். அதே பிரார்த்தனையைத் தான் தற்போதும் முஸ்லிம்கள் செய்வார்கள்.

முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் தரப்பில் மேல்முறையீட்டு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை பார்த்த பிறகும் சீராய்வு மனு தாக்கல் செய்வது அறிவுடைமை அல்ல. இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை முஸ்லிம் சமுதாயம் இன்று உணர்ந்து விட்டது.

முஸ்லிம்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த உச்ச நீதி மன்றமே தங்களுக்கு அநீதியிழைத்து விட்டதால், சட்டம் நீதி உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்பின் மீதும் நம்பிக்கை இழந்து விரக்தி அடைந்து ஒதுங்கிக் கொள்ளூம் நிலை தான் எதிர்காலத்தில் ஏற்படும்.

ஏ.எஸ்.அலாவுதீன்
பொதுச் செயலாளர்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF)