ராஜஸ்தானின் ஜலாவார் மாவட்டத்தில் தண்ணீர் பம்ப் திருடியதாக கூறி 40 வயது தலித் நபர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்று போலீசார் ஞாயிறன்று தெரிவித்தனர்.
சனிக்கிழமை காலை கட்டோலி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.தலித் சமூகத்தை சேர்ந்த துலிசந்த் மீனா மேவகேடா கிராமத்தைச் சேர்ந்தவர்.இவரை தங்கள் வயல்களில் இருந்து தண்ணீர் பம்பை திருடியதாக குற்றம் சாட்டி 60 வயது முதியவர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் தாக்கியுள்ளனர் என்று ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) நைனூரம் மீனா தெரிவித்தார்.
துலிச்சந்த் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது வழியில் குறுக்கிட்ட பூரிலால் தன்வார், அவரது மகன்களான தேவி சிங் (23) , மோகன் (20) இன்னும் சிலர் பம்ப் திருடியதாக கூறி சூடான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் வன்முறையில் முடிந்தது.இதில் துலிச்சந்த் அடித்து கொல்லப்பட்டார்.
துலிச்சந்தின் தந்தையிடம் திருட்டு குறித்து தன்வாரும் அவரது மகன்களும் வெள்ளிக்கிழமை புகார் அளித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து துலிச்சந்த்தின் தந்தை மகனை கண்டித்து மட்டுமில்லாமல் தன்வாரிடம் போலீசில் புகாரி அளிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழ் தன்வார், அவரது மகன்கள் மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ்ஹெச்ஓ தெரிவித்துள்ளார். மேலும் துலிச்சந்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சனிக்கிழமை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.