Hindutva Islamophobia Lynchings

உபி யில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது தாக்குதல் !

உ.பியில் முஸ்லிம் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் !- தொடரும் கும்பல் வன்முறை சம்பவங்கள்!

நேற்று(15-9-19) பிற்பகல் நேரத்தில் அலிகார் ரயில் நிலையத்தில் அடையாளம் காணப்படாத 10 முதல் 12 குண்டர்கள் அங்கிருந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தை தாக்கியுள்ளனர் . இதனால் அந்த குடும்பத்தை சேர்நத 4 நபர்களுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) பதிவு செய்த எஃப்.ஐ.ஆரின் படி, கண்ணாஜ் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சாஹிம் கான் தனது குடும்பத்தினருடன் கான்பூர்-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டுள்ளார்.சரியாக மாலை 4.30 மணிக்கு தனது குடும்பத்தினருடன் அலிகார் நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது அந்த பிளாட்பாரத்தில் 10முதல் 12 குண்டர்கள் அவர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த மதவெறி பிடித்த குண்டர்கள் தாக்கியதில் சாஹிம் கானின் மருமகன் தவ்ஃபிக் கானின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பெண்கள் என்றும் பாராமல் அவர்கள் இருவரின் மனைவிமார்களையும் அந்த காட்டுமிராண்டி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த நால்வரும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜே.என் மருத்துவக் கல்லூரியில் நோய்வாய்ப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு சிகிச்சை பார்க்க வேண்டி தான் சாஹிமின் குடும்பத்தினர் வந்திருந்தனர் என்று அவரது உறவினர் முகர்ரம் அலி தி இந்துவிடம் கூறினார். அன்றைய இரவு அவரின் வீட்டில் தான் தங்குவதாக இருந்துள்ளது. “சாஹிமின் மகள் மனநல நோய் வாய்பட்டவர். அவரது மகனுக்கு கல்லீரல் நோய் உள்ளது. தவ்ஃபிக் கானின் தலையில் கல்லை கொண்டு தாக்கியுள்ளனர், இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சாஹிம் மற்றும் அவருடன் இருந்த 2 பெண்களையும் விட்டு வைக்காது கடுமையாக தாக்கியுள்ளனர்.கோழை குண்டர்களின் இந்த தாக்குதலினால் சாஹிமின் மகள் பிளாட்பாரத்திலேயே மயக்கமுற்று கீழே விழுந்து விட்டார்.

சம்பவத்திற்கான காரணம்:

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சாஹிமுடன் ரயிலில் பயணித்தவர்கள் இல்லை. மாறாக வெளியில் இருந்து வந்தவர்கள். புர்கா அணிந்த பெண்களை குறிவைத்து குண்டர்கள் தாக்கியுள்ளனர். போலீசார் வந்த பிறகு அவர்களை கண்டு ஓட்டம் பிடித்தனர் என்று முகர்ரம் அலி கூறினார்.

தாக்குதலுக்கு ஆளான ஸாஹிம் ஒரு எளிய விவசாயி . பயணத்தின் போது அவர் குடும்பம் சக பயணிகளுடன் எந்தவிதமான வாக்குவாதத்திலும் ஈடுபடவில்லை. “இதுவே இந்த நகரத்திற்கான தவ்ஃபிக்கின் முதல் வருகையாகும், இவ்வாறு தான் அவர் வரவேற்கப்பட்டுள்ளார்” என்று முகர்ரம் அலி மேலும் கூறினார். எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மீதோ / மத அமைப்பின் மீதோ முகர்ரம் அலி குற்றம்சாட்ட மறுத்துவிட்டார்.

Read Also : உ.பி: ‘புர்காவில்’ வந்த முஸ்லிம் மாணவிகளை கல்லூரி முதல்வர் பிரம்பால் விரட்டியடிப்பு ! அராஜகத்தின் உச்சம் !

காவல் துறையினர் தாமதமாக செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போய் விட்டது என்று முகர்ரம் அலி கூறினார்.

ஐபிசியின் 147, 352 மற்றும் 394 பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி யஷ்பால் சிங் தெரிவித்தார். குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கோரத்தனமான தாக்குதலுக்கு எதிராகவும் , மக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் விதமாக செய்லபடும் இவ்வாறான சமூக விரோதிகளை கண்டிக்கும் முகமாகவும் அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட அணிவகுப்பை மேற்கொண்டனர்.

நாம் அறிந்த வரை தி இந்து நாளிதழை தவிர வேறு எவரும் இதை குறித்து செய்தி வெளியிடவில்லை

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உச்சக்கட்டத்தில் உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Please Support by donating us