ஃபலஸ்தீனியன் கைதிகள் கூட்டுறவு மற்றும் அத்தமீர் (Addameer) உள்ளிட்ட 3 அரசு சாரா அமைப்புகளின் அறிக்கையின்படி ஏறத்தாழ 470 ஃபலஸ்தீனியர்கள் ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலிய அரசால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (9-9-19) வெளியான இவ்வறிக்கையில் “தடுப்புக்காவலில் குறைந்தது 50 சிறார்கள் மற்றும் 11 பெண்கள்” இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“கைது செய்யப்பட்டவர்களில் 162 ஃபலஸ்தீனியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேத்தைச் சேர்ந்தவர்கள்” என அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் ரமல்லாஹ் நகரத்தில் 82, ஹிப்ரான் பகுதிகளில் 50, ஜெனின் நகரத்தில் 44, நப்லஸ் நகரில் 38, பெத்லஹம் நகரில் 30, கல்கில்யா மாவட்டத்தில் 24 மற்றும் மீதமுள்ளவர்கள் துல்கர்ம், தௌபஸ், சல்ஃபித், ஜெரிகோ போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும், 18 வயதிற்கு உட்பட்ட 220 சிறார்கள் மற்றும் 38 பெண்கள் இன்றளவும் இஸ்ரேலிய சிறைச்சாலையில் கைதியாக இருக்கின்றனர். தற்சமயம் இஸ்ரேலில் 7,500 நபர்கள் கைதிகளாக இருக்கின்றனர். குறிப்பாக ஆகஸ்ட் மாத இறுதிவரையில் 5700 ஃபலஸ்தீனியர்கள் சிறைச்சாலையில் உள்ளனர்.
அதில் கிட்டத்தட்ட 500 ஃபலஸ்தீனியர்கள், “நிர்வாக தடுப்புக்காவல்” (Administrative Detention) என்ற இஸ்ரேலிய கொள்கைகளின் அடிப்படையில் எந்தவொரு அபராதமும் செலுத்த அல்லது வழக்கு தொடுக்க ஆறு மாத காலம் வரை சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.
பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பொழுது (1923-1948) முதன் முதலில் “நிர்வாக தடுப்புக் காவல் திட்டம்” ஃபலஸ்தீனில் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு: அபூ ஷாமில்.