Hindutva Indian Judiciary Lynchings

‘தப்ரெஸ் அன்சாரி’ கொலை செய்யப்படவில்லை(!) போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! – திசைமாறி செல்லும் கும்பல் வன்முறை வழக்கு!

“அவர் இறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு நான் கர்ப்பமாக உள்ளேன் என்பதை அறிந்து கொண்டேன். எனினும் எனது கணவனை இழந்த சில நாட்களிலேயே  எனது வயிற்றில் இருந்த சிசுவையும் பறிகொடுத்தேன். எனது உடலால் மன அழுத்தத்தை  தாங்க முடியாமல் போனது தான் இதற்க்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறினர். நாங்கள் இருவரும் குழந்தை ஒன்றை பெற்று கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவல் கொண்டோம் ” என்கிறார் தப்ரேஸ் அன்சாரியின் மனைவி ஷஹிஸ்தா. இவர் இன்றளவும் துன்பத்திலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளார்.

காதல் ஜோடிகளாக இருந்த இவர்கள் தப்ரேஸ் அன்சாரி கொடூரமாக கொல்லப்பட்டதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். புதிதாக மணம் முடித்திருக்கும் ஷஹிஸ்தா இன்னும் தனது கணவனின் வீட்டாருடன் முழுமையாக நெருங்கி பழகி விடவும் இல்லை அதற்குள் தனது கணவரை பறி கொடுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி அன்று தப்ரேஸ் அன்சாரி  ஒரு கம்பத்தில் கட்டி வைத்து திருடர் பட்டம் சூட்டி .. ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஹனுமான் என்று கோஷமிட வற்புறுத்தி தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமாக 7 மணிநேரம் அடித்து துன்புறுத்தினர்.பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தப்ரேஸ் அன்சாரி கடந்த ஜூன் 22ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

பிரபல ஆங்கில ஊடகமான “The quint” தப்ரேஸ் அன்சாரியின் மனைவியிடம் பேட்டி கண்டது. அப்போது அவரைப் பேட்டி எடுத்த செய்தியாளரிடம் ” எனக்கு நீதி வேண்டும். எனக்கு எப்படியாவது நீதி கிடைக்க உதவிடுங்கள். என் கணவரை கொன்ற கயவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என்னுடைய அமைதியை எனக்கு திரும்ப தாருங்கள்” என்று கல் நெஞ்சமும் கரையும் வகையில் கேட்டுக்கொண்டார். 

இவர் இந்த அளவுக்கு மனம் உடைந்து இருக்க காரணம்?

போலீஸார் கடந்த  ஜூலை 29 ஆம் தேதி தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் அன்சாரியை  கொடூரமாக தாக்கிய எவருடைய பெயரிலும் கொலை வழக்கு பதிவு செய்யாமல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர் .காவல் துறை விசாரணைக்கு ஆட்சேபனை தெரிவித்த அவரது வழக்கறிஞர் அல்தாஃப் உசேன் ஆகஸ்ட் 31 அன்று நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொலை குற்றம் சாட்டப்பட்டிருக்க வேண்டிய பப்பு பாஜக கொடியுடன் போஸ்

குற்றப்பத்திரிகையின் அனைத்து பக்கங்களையும் ‘தி க்வின்ட்’ கண்டது. அதில் , குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டங்களான 147 (கலவரம்), 149 (சட்டவிரோதமாக குழுமுதல் ), 341, 342,323,325,304 மற்றும் 295 A (மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் செயல்படுதல்) ஆகியவையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரகாஷ் மண்டல் என்கிற  பப்பு மண்டல், கமல் மகாடோ, சுனாமோ பிரதான், பிரேம்சந்த் மஹாலி, சுமந்த் மகாடோ, மதன் நாயக், சாமு நாயக், மகேஷ் மஹாலி, குஷால் மஹாலி, சத்யநாராயண் நாயக் மற்றும் பீம் சென் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஷஹிஸ்டா – தப்ரேஸ் அன்சாரியின் மனைவி – அவரது திருமண நாளில் – Photo:The Quint

அன்சாரி வழக்கில் கொலை நடக்கவில்லை என்ற முடிவிற்கு எப்படி வந்தார்கள்?

” திடீர்  மாரடைப்பு  காரணமாக தப்ரெஸ் இறந்துவிட்டார் என்ற செய்திகளை நாங்கள் கேள்விப்படுகிறோம். எனினும் தப்ரேஸ் அன்சாரியை தலையில் கொடூரமாக தாக்கியதால் அவரது மண்டை ஓட்டில் விரிசல்  ஏற்படும் அளவிற்கு மிகப் பெரிய காயம் ஏற்பட்டது. ஆனால் அவரது மரணத்திற்கு காரணம் வெறும் மாரடைப்பு என்றால் இதை எப்படி நம்புவது?” என்று வழக்கறிஞர் அல்தாப் கேட்கிறார்.

இது தொடர்பாக தி கிவின்ட் இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரியான ஆர். நாராயன் அவர்களை தொடர்பு கொண்டது. அப்போது கூறிய அவர் ” தப்ரேஸ் அன்சாரியின் மரணத்திற்கு காரணம் மாரடைப்புதான் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். எனினும் நாங்கள் இதுகுறித்து மருத்துவர்களை மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். எனது இத்தனை ஆண்டுகால காவல்துறை அனுபவத்தில் இப்படிப்பட்ட ஒரு வழக்கில் உயிர் இழந்த ஒருவர் மாரடைப்பால் தான் உயிரிழந்தார்  என்பது போன்ற ஒரு வழக்கை சந்தித்தது இல்லை. எனினும் நாங்கள் மருத்துவர்கள் வழங்கும் அறிக்கையை வைத்துதான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும்” என்று தனது செயலுக்கு நியாயம் கற்பித்தார்.

காவல்துறையினர் தங்கள் பொறுப்பற்ற தன்மையை மறைக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றவும் ‘திடீர் மாரடைப்பு ‘  என்ற காரணத்தை பயன்படுத்துகிறார்கள் என்று வழக்கறிஞர் அல்தாஃப் கருதுகின்றார் .

மனித உரிமைகள் சட்ட வழக்கறிஞர் அமன் கானை அணுகியபோது, இது சரி இல்லை. மாரடைப்பால் தான் மரணித்தார் என்று தீர்மானித்து இருப்பது ஒரு முழுமை அடைந்த மருத்துவ அறிக்கையாக ஏற்க முடியாது.இதை வைத்து கொண்டு காவல்துறை  302 வது பிரிவை  (கொலை ) அகற்ற  எந்த முகாந்திரமும் இல்லை  என்று கூறினார் .

விசாரணை குழு :

தப்ரெஸின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரிக்க சரைகேலா-கர்வான் துணை ஆணையர் அஞ்சநேயுலு டோட் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்களின் ஆய்வின் முடிவில் குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கான காரணம் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய இருதரப்பினரும் தான் என்று தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மருத்துவமனைக்கு தாமதமாக வந்தாலும் மருத்துவர்கள் அன்சாரியின்  மண்டை ஓட்டில் ஏற்பட்ட காயங்களை சரியாக பரிசோதனை செய்யவில்லை என்று திரு. டோட் தனது ஆய்வறிக்கையை கடந்த ஜூலை 12ஆம் தேதி அறிக்கை வெளியிட்டார்.

தப்ரெஸ் அன்சாரி தரப்பு வழக்கறிஞர் – திரு. அல்தாப்


இதைக்குறித்து நாராயனிடம் கேட்கும்பொழுது.. “நாங்கள் தப்ரேஸ் அன்சாரியை சரைகேலாவில் உள்ள   சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் எல்லாம் ஒன்றும் இல்லை. எங்களில் எவரும் அவர் மரணிப்பார் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆம்.. அவரது சிடி (CT) ஸ்கேன் எடுக்கப்படவில்லை தான். ஆனால் இது ஒன்றும் டில்லி அல்ல. அப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் கொண்ட மருத்துவமனை அது அல்ல. (பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு பொலிஸ் அதிகாரி, சதர் மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் இயந்திரம் கூட இல்லை என்று கூறினார்). மேலும்  அன்சாரி வாந்தி போன்ற எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்.

இறுதியில் நாராயன் கூறும்பொழுது போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் மருத்துவர்கள் அன்சாரி மாரடைப்பால் தான் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்து விட்டனர். எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிட்டுள்ளனர் அதை வைத்துக்கூட போலீசார் இதை ஒரு கொலை வழக்காக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க முடியும் எனினும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை அவர்களின் நோக்கம் குற்றவாளிகளை காப்பாற்றுவதுதான் என்று அல்தாப் கூறினார்.நாங்கள் நீதிமன்றத்தில் இதை கொலை வழக்காக கருதி வழக்கு நடத்த வேண்டும் என்று முறையிடுவோம் நீதிபதி ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் நாங்கள் உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறினார்.

இவை அனைத்தும் நடைபெற்று வரும் வேளையில் தப்ரேஸ் அன்சாரியின் மனைவி முற்றிலுமாக அனைத்தையும் விட்டு ஒதுங்கி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். காவல்துறையினர் அழைத்தால், நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டி இருந்தால் மட்டும் அன்சாரியின் மாமா மஸ்ரூர் என்பவருடன் சென்று வருகிறார். இருவரும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று ந நம்பி காத்து கிடக்கின்றனர்.
 இன்னும் தற்போது உருவாகியுள்ள “புதிய இந்தியாவில்” நீதி கிடைக்குமா என்பதுதான் கேள்வி.

சிறுபான்மையினர் விஷயத்தில் இவ்வாறு நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல.. தற்போது இவ்வாறு நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

படிக்க: புதிய இந்தியா ! -பெஹ்லு கான் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விடுதலை !

எங்கள் பணிகளை தொடர்ந்து செய்திட உங்களால் ஆன உதவியை செய்திடுங்கள்..

Courtesy&Source: The Quint