மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாசன கால்வாயை தூர்வாராமலேயே அரசு அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காட்டி சுருட்டி விட்டதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
அரசை நம்பி பயனில்லை என தெரிந்து, மக்களும், தன்னார்வலர்களும் இணைந்து ஏரி கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பாசன கால்வாயை தூர்வாராமல், அதனை தூர்வார 5 லட்சம் ரூபாய் செலவு செய்தாக கணக்கு காட்டியதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கால்வாய் தூர்வாரப்பட்டதாக கல்வெட்டையும் வைத்துள்ளனர். இது அப்பகுதி விவசாய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் குடமுறட்டி கால்வாய் உள்ளது. சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்றன. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட வறட்சிக் காரணமாக கால்வாய் தூர்வாரப்படாமல் வரண்ட்டுபோய் இருந்துள்ளது. இதனால் மழைபெய்தால் கூட சில இடங்களில் மட்டும் தண்ணீர் தெங்கியிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த பணத்தில் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் கால்வாயைத் தூர்வாரியுள்ளனர்.
இந்த பணிகள் 7 நாட்களாக நடைபெற்றுவந்த நிலையில் குடமுறட்டி கால்வாய் தூர்வாரியதாகவும், அதற்காக 5 லட்சம் ரூபாய் செலவு செய்ததாகவும் அரசு அதிகாரிகள் கல்வெட்டை அமைத்துள்ளனர். அந்த கல்வெட்டை மக்களின் கண்களுக்கு தென்படாத இடத்தில் அதிகாரிகள் வைத்துள்ளனர்.
மேலும் தூர்வாரப்பட்ட இடத்தை அதிகாரிகள் புகைப்படம் எடுத்துச்சென்றதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மக்கள் பணத்தை கையாடல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.