(Representation Image: Ben Gingell via Shutterstock)
கடந்த வெள்ளிக்கிழமை (23-8-2019) மாலை போலீஸ் கான்ஸ்டபிள்,ஒருவரை குஜராத்தில் உள்ள மதவெறி பிடித்த மனிதமிருகங்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
குஜராத் வதோதரா 3 ம் மண்டல டி.சி.பி சஞ்சய் காரத் இது தொடர்பாக கூறுகையில் சனிக்கிழமை அன்று எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “தாக்குதல் குறித்து நாங்கள் அறிந்துள்ளோம் … விசாரித்து வருகிறோம்” என்று காரத் கூறினார். இருப்பினும், இந்த வழக்கில் யாரேனும் கைது செய்யப்பட்டார்களா ? என்பதை பற்றி தனக்கு எதுவும் தெரியாது (!) என்றும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஆரிப் இஸ்மாயில் ஷேக் (44), இரவு 8.30 மணியளவில் வீடு திரும்பியபோது எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இன்றி தாக்கப்பட்டதாக கூறினார். “இந்த நேரத்தில் என் முகத்தை மறைக்காததன் மூலம் நான் தவறு செய்தேன்,” என்று ஷேக் கூறினார், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறும்போது வழக்கமாக முகத்தை மறைக்கிறார். ஷேக் குஜராத் காவல்துறையில் ஒரு கான்ஸ்டபிள்.
நடந்த சம்பவம் :
பாதிக்கப்பட்ட ஆரிப் இஸ்மாயில் ஷேக் (44) பணியை முடித்துக்கொண்டு இரவு 8.30 மணியளவில் தனது வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார். எவரையும் வம்புக்கு இழுக்கவில்லை ,எனினும் அங்கு தோன்றிய குண்டர்களால் அவர் தாக்கப்பட்டுள்ளார். ” நான் எப்போதும் வீட்டை விட்டு வெளியேறும் போது என் முகத்தை மூடி கொள்வது வழக்கம். ஆனால் நேற்று நான் முகத்தை மறைக்காமல் சென்றது எனது தவறு. அதனால் இவ்வாறு நடந்துள்ளது” என்று இஸ்மாயில் தெரிவித்தார். இவர் குஜராத் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர்.
ஐபிசியின் 323, 143, 147, 504 மற்றும் 506 (2) பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. தனது புகாரில், ஷேக் கூறியுள்ளதாவது : “பிரதாப்நகர் தலைமையகத்தில் எனது பகல்நேர பணியை முடித்துவிட்டு எனது வீட்டிற்கு திரும்பிச் செல்லும் வழியில், சிவசக்தி மொஹல்லா பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் ஒருவன் சாலையைக் கடப்பது போல் என்னை நோக்கி சைகை செய்தான்.அவர் சாலையைக் கடக்க நான் அமைதியாக நின்றிருந்தேன்… ஆனால் அவர் என்னை நோக்கி வந்து என் மதத்தை குறிவைக்கும் வார்த்தைகளால் என்னை கடுமையாக விமர்சனம் செய்தார். ”
தாக்குதல் நடத்தியவர்கள் அவரது உடல் தோற்றதை வைத்து , “ஓ, போடியா!” (கிழவனே) மற்றும் “ஓ, முஸ்லீமே !” என்று ஏளன தொனியில் அழைத்துள்ளனர். “பெட்ரோல் பம்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஐந்து முதல் ஏழு நபர்கள் அவருடன் சேர்ந்து கொண்டனர், அவர்கள் அனைவரும் என்னை தொடர்ந்து கடுமையாக தாக்கினர்.. எனது தாடியை பிடித்து இழுத்தனர்.. முகத்தில் கடுமையாக குத்தப்பட்டேன், பின்னர் எனது கழுத்தை கடுமையாக நெறிக்க முயன்றனர். ”என்று எஃப்.ஐ.ஆரில் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் குண்டர்கள் தாக்குதல் நடத்திய சமயத்தில் : “Aav fatko aaje ane patavi daiye (இன்றைக்கு இவனை முடித்து விடுவோம்),” மற்றும் “Miya bao fati gaya chho (முஸ்லிம்கள் தங்கள் வரம்புகளை மறந்துவிட்டார்கள்)” என்று கூறியதாக இஸ்மாயில் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்ற சில “உயிர்ப்பான மக்கள்” அவர்களை நோக்கி விரைந்து வந்துள்ளனர். இதனை கண்ட அந்த கோழை பேர்வழிகள் இஸ்மாயிலின் பர்ஸை திருடி கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர் (கோவையில் பிரியாணி அண்டாவை திருடியது தான் நினைவில் வருகிறது). தாக்குதல் நடத்தியவர்கள் ஷேக்கின் முஸ்லீம் தோற்றத்தை (அவரது முகத்தில் இருந்து தாடியின் அடையாளத்தை ) சகித்து கொள்ள முடியாமல் தாக்கியதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் அட்டூழியம் !
பல மணிநேர போராட்டதிற்கு பிறகு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அப்போது பானிகேட் காவல் நிலையத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் (தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்) காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக புகாரை பதிவு செய்ய தயக்கம் காட்டினார்கள் என்று கூறினார். “வழக்கை பதிவு செய்த காவல்துறை எழுத்தாளர் இந்த சம்பவத்தை எளிமையாக்கிட முழு முயற்சியை மேற்கொண்டார், ஏதோ ஒரு சாதாரண வாக்குவாதம் ஏற்பட்டதால் உண்டான கைகலப்பு , சண்டை போன்று வழக்கை திசை திருப்ப முயற்சித்தார் ” என்று அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில் “நடைபெற்றுள்ள குற்ற சம்பவமானது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட கும்பல் வன்முறையாகும் , அது போக மத உணர்வுகளை புண்படுத்துவதற்கான ஒரு சில ஐபிசியின் சிறப்பு பிரிவுகளும் இவ்வழக்கிற்கு பொருந்தும்.அவர்களில் ஒருவராக ” [ஆரிஃப்பைக் குறிப்பிட்டு ] இருக்கும் ஒருவரையே இவ்வாறு வேறுபடுத்தி வித்தியாசமாக நடத்தப்படுவதைக் பார்க்க வருத்தமாக இருந்தது” என்று காவல்துறையின் அக்கறையின்மையைக் சுட்டி காட்டினார்.
குஜராத் ஊடகங்கங்களின் நயவஞ்சகம் !
காவல் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த சில மக்கள் நாங்கள் சில உள்ளூர் செய்தி நிறுவனங்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறினோம் ஆனால் அவர்கள் அதை வெளியிடமுடியாது என்று மறுத்துவிட்டனர்.
அங்குள்ள முன்னணி ஆங்கிலம் மற்றும் குஜராத்தி ஊடகங்களும் இது குறித்து எந்த ஒரு துண்டு செய்தியையும் பிரசுரிக்க மறுத்து விட்டன.
“வதோதரா சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட முதல் வெறுப்பு தாக்குதல் இது இல்லை என்றாலும், ஒரு முஸ்லீம் காவல்துறை அதிகாரியின் மீதே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் வெறுப்பு உணர்வும் அதன் பிரச்சாரமும் எந்தளவிற்கு தீவிரமாகி வருகிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும் . இந்த தாக்குதலானது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விஷயத்தில் முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் இவ்வாறு தொடர்ந்து நடந்து கொள்வதானது, முஸ்லிம்களுக்கு மேலும் இவர்கள் மீதான நம்பிக்கையை வலுவிழக்க செய்யும். ”என்று ஒரு உள்ளூர் சமூக ஆர்வலர் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார் ஆரிஃப். அவர் சனிக்கிழமை தனது பணிக்கு திரும்பினார். காவல் துறையில் உள்ள நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
நியூஸ் கேப் தொடர்ந்து செயல்பட உதவிடுங்கள்!
இந்த செய்தியை நாம் வெளியிடும் சமயம் வரை நியூஸ் கிளிக் என்ற ஊடகத்தை தவிர வேறு எவரும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நியூஸ் க்ளிக்கிற்கு நன்றிகள் கோடி.