Dalits

தலித் ஒருவரின் உடலை தகனம் செய்ய வழிவிடாததால் ’20 அடி உயர பாலத்திலிருந்து’ உடல் இறக்கி தகனம் !-அதிர்ச்சி வீடியோ.

தலித் சமூகத்தை சேர்ந்த இறந்த ஒருவரின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் தடை விதித்ததால் இறந்தவரின் உடலை பாலத்திலிருந்து கட்டி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அருகே தலித் சமூகத்தை சேர்ந்த குப்பன் என்பவரின் உடலின் இறுதிச் சடங்கிற்காக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும்போது, அப்பகுதியின் மற்றொரு வகுப்பினர் அந்த உடலை அப்பகுதி வழியே எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளனர். உடலை எடுத்துச் செல்ல வேறு வழியில்லாததால் இறந்தவரின் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.

எனவே வேறு வழி ஏதும் இல்லாததால் அங்கிருந்த 20 அடி உயர பாலத்திலிருந்து உடலை ஒரு ஸ்ட்ரெச்சரில் வைத்து , பாலத்தின் மேலிருந்து கயிறு மூலம் கட்டி இறக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவை படமாக்கியவர் வேலூரில் உள்ள வனியாம்படி தாலுகாவில் சம்பவம் நடைபெறுவதாக கூறுகிறார், அங்கு கிராமத்தில் உள்ள தலித் காலனிக்கு சொந்தமாக சுடுகாடு இல்லை. “இது தான் எங்கள் சுடுகாடு . ஒவ்வொரு முறையும் இறந்தவர் உடலை இப்படி தான் இறக்குகிறோம் .எங்களுக்கு என்று சுடுகாடு இல்லை” என்று அவர் கூறுகிறார்.

இந்துஸ்தான் டைம்ஸுடன் பேசிய ஒரு பொலிஸ் அதிகாரி, வெள்ளாளர் கவுண்டர் மற்றும் வன்னியர்கள், குப்பனின் உடலை விவசாய நிலத்தின் வழியாக எடுத்துச் செல்வதைத் தடுத்ததாகக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 17 சனிக்கிழமையன்று நடந்தது. இதன் வீடியோ புதன்கிழமை வைரலாகியது. 55 வயதான குப்பன் அதற்கு முந்தைய நாள் விபத்தில் காலமானார். “மேல் சாதியினர் என்று கருதப்படுபவர்கள் சடலங்களை அந்தப் பகுதி வழியாக எடுத்துச் செல்லபடுவதை விரும்பாததால் பாதையைச் சுற்றியுள்ள நிலங்களை விலைக்கு வாங்கிக்கொண்டனர்” என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

“ எங்கள் முன்னோர்களின் காலத்திலிருந்து நாங்கள் இந்த பொதுவான – அனைவரும் பயன்படுத்தக்கூடிய பாதையாக பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் தற்போது எங்களை செல்லவிடாதவாறு வேலி அமைத்துவிட்டனர். வேலியை அகற்றி வழிவிடுமாறு நாங்கள் அவர்களிடம் கோரியபோது, அவர்கள் அதற்க்கு தயாராக இல்லை. எனவே, உடலைச் சுமந்து சென்று பாலத்திலிருந்து கயிறு கட்டி இறக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம், ”என்று குமார் என்ற உறவினர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

21 வயதான குப்பனின் மருமகன் விஜய், டி.என்.எம் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது : “20 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டை தொடர்ந்து பயன்படுததிட சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இப்போது அந்த நிலத்தை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். எங்கள் சடலங்களை அங்குள்ள சுடுகாட்டில் அனுமதிக்க அவர்கள் தயாராக இல்லை. பாலம் கட்டப்படுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் இறந்தவரின் உடலை தண்ணீரில் அப்படியே விட்டுவிடுவோம். ஆனால் இப்போது உடல் தகனம் செய்ய அதை பாலத்தின் கீழே இறக்குகிறோம். எங்களுக்கு உதவுமாறு பல்வேறு மாவட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், பயன் ஒன்றுமில்லை. “

என்று தனியுமோ இந்த சாதி கொடுமைகள் ?!