காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கியதிலிருந்து இதுவரை (மூன்று நாட்களில்) மொத்தம் 21 சிறுவர்கள்/ ஆண்கள் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகரின் பிரதான மருத்துவமனையில் (SMHS) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரபல ஆங்கில ஊடகமான தி வயர் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
மருத்துவமனையின் முக்கிய பொறுப்பாளர்கள் மீடியாவிற்கு எந்த விதமான தகவல்களையும் கொடுக்க மறுத்தாலும் மருத்துவமனையில் உள்ள ஒரு சில மருத்துவர்களும் செவிலியர்களும் கொடுத்த தகவலின்படி ஆகஸ்ட் 6 ஆம் தேதி13 நபர்கள் பெல்லட் குண்டுகள் தாக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 7 அன்று மேலும் 8 நபர்கள் தங்களுடைய கண்களிலும் பிற உடல் பாகங்களிலும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.காஷ்மீரில் ஒரு சிறுவன் CRPF படையினர் துரத்தி வந்ததால் உயிரிழந்தார். ( இது நியூஸ் கேப் செய்தி வெளியிட்டு இருந்தது). இதுகுறித்து மேலதிகமாக தகவல் வழங்க மருத்துவமனையில் மறுத்து விட்டனர்.
தாக்குதலுக்கு ஆளானவர்கள் மருத்துவமனையில் :
மருத்துவமனையின் வார்டு நம்பர் 8 இல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை காணமுடிந்தது. அவர்கள் அளித்த தகவல்படி ஒரு சிலர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் பொழுது தாக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினரை நோக்கி கற்களை வீசாமல் அமைதியாக இருந்தவர்கள் மீதும் கூட தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
மீடியாக்களில் காஷ்மீரில் முழு அமைதி நிலவி வருவது போன்று ஒரு பிம்பம் கொடுக்கப்பட்டாலும் உண்மை நிலவரம் இதற்கு நேர்மாறாக உள்ளது என்பது தான் இந்த மருத்துவமனையிக்கு சென்றதில் நாங்கள் பெற்ற பாடம் என்கிறது தி வயர் ஊடகம்.
மோடி அரசு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு முதல் இன்றைய நாள்வரை மொபைல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்டர்நெட் சேவையும் கிடையாது. செய்தித்தாள்களும் அச்சிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வரையில் நீடித்து கொண்டுதான் உள்ளது (8.19pm-9 aug 2019)
இது தவிர கடுமையான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இவை அனைத்தும் காஷ்மீர் மக்களை மிகவும் சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பிரதான மருத்துவமனைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் வாகனங்கள் அதிக அளவில் செல்ல அனுமதிக்கப்படுகின்றது. மாலை நேரங்களில் ஒரு சில பல வியாபாரிகள் , ரொட்டி விற்கும் கடைகள் போன்ற சிறு வியாபாரிகள் சிறிது நேரம் தங்கள் கடைகளை திறக்கின்றனர். எனினும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பொழுது எது செய்வது கூடும் ,எது செய்வது கூடாது என்று மக்கள் மிகவும் அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலே படத்தில் இருப்பவர் நதீம் இவர் 15 வயது சிறுவர் ஸ்ரீநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர். இவர் தன்னுடைய நண்பருடன் டியூசனுக்கு செல்லும்பொழுது கடந்த ஆகஸ்ட் 7 அன்று பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது இவருடைய வலது கண் முற்றிலுமாக பார்வை இழந்து விட்டதாக தெரிவித்தார்.
காஷ்மீர் வாலிபரின் கோபம் !
அருகில் மற்றொரு வாலிபர் தன்னுடைய கண்களில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவம் செய்யப் பட்டுக் கொண்டிருந்தார். அவர் ரொட்டி சுடும் கடையில் ஒரு தொழிலாளி. அவர் மிகுந்த கோபத்தில் காணப்பட்டார். ஆரம்பத்தில் பத்திரிகையாளருடன் பேசுவதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்தார். பின்னர் ” டில்லியிலிருந்து வந்துள்ள எவரிடமும் நான் பேச தயாராக இல்லை எதற்காகப் பேசவேண்டும்? உண்மையில் நாங்கள் என்ன சொல்ல வருகிறோம் என்பதை அறிந்து கொள்ள கூட உங்களுக்கு இஷ்டம் இல்லை.” என்று கோபத்துடன் கூறினார்.
அந்த வாலிபர் பேச மறுத்தாலும் அவருடைய அருகில் இருந்த அவருடைய நண்பர் என்ன நடந்தது என்பதை தெரிவித்தார். நாங்கள் எங்கள் கடைகளில் ரொட்டி சுட்டுக் கொண்டு இருந்தோம். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாதுகாப்பு படையினர் ” நீங்கள் காஷ்மீரி மக்களுக்கு உணவு தயாரித்து கொண்டுள்ளீர்களா? “மாறாக “நீங்கள் அவர்களுக்கு விஷத்தை தான் கொடுக்க வேண்டும்” என்று கூறி எங்களுடைய கடைக்குள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, எங்களை விட்டு சென்றனர் என்று தெரிவித்தார்.
இவை அனைத்தும் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்த செய்திகள். இவர்கள் சொல்லும் சம்பவம் எப்பொழுது நடந்தது என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. என்றாலும் அவர்களுடைய காயங்கள் உண்மை இதில் எந்தவிதமான பொய்யும் இல்லை அவர்களுடைய கோபத்தில் தான் உள்ளார்கள் என்பதிலும் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
நன்றி : தி வயர்