Hindutva Lynchings Modi

“ஜெய் ஸ்ரீராம் என்பது போர்க்கால அழுகையாக மாறிவிட்டது” : கும்பல் வன்முறைகளுக்கு எதிராக மணிரத்னம் உட்பட 49 திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் பிரதமருக்கு கடிதம்.

பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், கும்பல் வன்முறை சம்பவங்களை வெறுமென விமர்சித்துவிட்டு செல்வது போதாது என்றும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு கடுமையான குற்றமாக ஆக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்..

நாற்பதுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் தூண்டிவிடக்கூடிய போர்க்கால முழக்கமாக மாறி, நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“முஸ்லீம்கள், தலித்துக்கள், மற்றும் சிறுபான்மையினர் மீதான கும்பல் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தின் மூலம் கேட்டு கொண்டுள்ளனர். 2016-ம் ஆண்டு முதல் 840-க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் NCRB [National Crime Records Bureau] கூறியுள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகச் சிறிய அளவிலேயே தண்டனை கிடைத்துள்ளதையும் கூறியுள்ளனர்.

அபர்ணா சென், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், ஷ்யாம் பெனகல், ரேவதி, கொங்கனா சென் சர்மா உள்ளிட்ட திரைக்கலைஞர்களும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, எழுத்தாளர் அமித் சவுத்ரி, கல்வியாளர் ஆசிஸ் நந்தி உள்ளிட்ட 49 பேர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

“வர்த்தமளிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீராம் என்பது தூண்டக்கூடிய போர்க்கால அழுகையாக இன்று மாறி, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பல கும்பல் வன்முறைகள் அதன் பெயரால் நடக்கின்றன. மதத்தின் பெயரால், இத்தனை கொடூரமான வன்முறைகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது! இது ஒன்றும் பழங்காலம் அல்ல! நாட்டின் பெரும்பான்மையினருக்கும் ராமன் என்கிற பெயர் புனிதமானது. இந்நாட்டின் உயர்ந்த அதிகாரம் படைத்த நீங்கள், ராமனின் பெயரை சீர்குலைக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.” என பிரதமரிடம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அதில், “எதிர்க்குரலோ, மாற்றுக்கருத்தோ இல்லாமல் ஜனநாயம் என்பது இல்லை. எனவே, மக்களை ‘தேசவிரோதி’; ‘நகர்ப்புற நக்ஸல்’ என முத்திரை குத்துவது தடுக்கப்பட வேண்டும். ஆளும் கட்சியை விமர்சிப்பது நாட்டை எதிர்ப்பது ஆகாது. ஆட்சியில் இருக்கும் கட்சி, நாடாகிவிடாது. அது நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி அவ்வளவே. எனவே, அரசுக்கு எதிரான நிலைப்பாடு, நாட்டுக்கு எதிரான நிலைப்பாடாக சமன்படுத்த முடியாது. எதிர்ப்புணர்வுக்கான திறந்த சூழல் நசுக்கப்படக்கூடாது, அது நாட்டை பலமாக்கத்தான் பயன்படும்.” எனவும் தெரிவித்துள்ளனர்.

Courtesy : scroll