“பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்”
கேரள உயர்நீதிமன்றத்தின் தற்போதய நீதிபதி வி.சிதம்பரேஷ் சமீபத்தில் பிராமணர்கள் மற்றும் அவர்களின் நல்லொழுக்கங்கள் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொச்சியில் நடைபெற்ற தமிழ் பிராமணர்களின் உலகளாவிய கூட்டத்தில், நீதிபதி பிராமணர்களின் நற்பண்புகளை புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார்.
நீதிபதியின் பேச்சு :
“பிராமணர் என்பவர் யார் ? பிராமணர் என்பவர் “திவிஜன்மனா” – அதாவது இரண்டு முறை பிறப்பவர் … அதற்கு காரணம் முந்தைய பிறவியில் செய்த நல்வினைகள் தான் .
தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், பெரும்பான்மை சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு போன்ற தனித்துவம் மிக்க அனைத்து நல்ல குணங்களும் ஒருங்கே கொண்டவரே பிராமணர்கள்.
பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அஹிம்சாவாதிகள் என்றும் தெரிவித்தார்.கேரளாவில் பல்வேறு அக்ராஹார (பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட கோயில் நிலம்) பகுதிகள் உள்ளன, அவை அனைத்தும் பாரம்பரிய பொக்கிஷங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்க படவேண்டும் .
மேலும் அவ்விடங்களில் வேறு பிளாட் கட்டுமானங்களுக்கு ஒதுக்கப்படக்கூடாது என்று கூறினார்.
“இடஒதுக்கீடு சமூகம் மற்றும் சாதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமா ?என்று சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் உள்ளீர்கள்.அரசியலமைப்பு பதவியை வகித்த நிலையில் , எந்தவொரு கருத்தையும் வெளிப்படுத்துவது எனக்கு சரியானதாக இருக்காது – நான் எனது கருத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக நான் உங்கள் ஆர்வத்தைத் தூண்டுகிறேன். பொருளாதார இடஒதுக்கீடு குறித்து குரல் எழுப்ப ஒரு தளம் இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறேன்.சாதிய , வகுப்புவாத இடஒதுக்கீடு பற்றி நான் கூறவில்லை. நீங்கள் குரல் உயர்த்திப் பேசவேண்டும். அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும்.”
நம்மை ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிராமண சமூகம் அதன் கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதில் போதுமான குரல் கொடுக்கவில்லை என்பதை தனது இறுதி கருத்தாக கூறி கொண்டு பேச்சை முடித்து கொண்டார்.
2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிதம்பரேஷ், டிசம்பர் 2012 முதல் நிரந்தரம் ஆக்கப்பட்டார்.