பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சர்வதேச விமர்சனங்கள் இருந்தபோதிலும், நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருடன் இஸ்ரேலிய புல்டோசர்கள் திங்களன்று(22-07-19) பாலஸ்தீனிய கிராமமான சுர் பஹெரில் பாலஸ்தீனர்களை பிரிக்கும் சுவர் அருகே உள்ள வாதி அல்-ஹம்முஸ் பகுதியில் சுமார் 100 வீடுகளை இடிக்கச் சென்றுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமின் விளிம்பில் உள்ள பாலஸ்தீனிய கிராமமான சுர் பஹெர் 1967 போரில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இஸ்ரேலால் கட்டப்பட்ட “இனவெறி சுவர்” என்று பாலஸ்தீனர்களால் அழைக்கப்படும் (ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன மேற்குக் கரையை பிரிக்கும் ) பிரம்மாண்ட சுவர் அருகே உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்(!) என்று கூறி அழிக்க முடிவெடுத்துள்ளது.
இஸ்ரேலிய உச்சநீதிமன்றம் கடந்த மாதம் இராணுவத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. திங்களன்றை (இன்று) வீடுகளை இடிப்பதற்கான காலக்கெடுவாக நிர்ணயித்தது.
இவ்வாறு இடிப்பது ஒரு கெட்ட முன் உதாரணமாகி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சுற்றிலும் உள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் படிப்படியாக அழிக்கும் முயற்சிக்கு வித்திடும் என்று பாலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.
குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான நீண்டகால முயற்சிகளின் ஒரு பகுதியாக இஸ்ரேல் “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்பதை ஒரு “சாக்காக” பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் குடியேற்றங்கள் அனைத்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது.
சுர் பஹேருக்குள் அமைந்துள்ள வாதி அல்-ஹம்முஸ் பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் பாலஸ்தீனிய அதிகாரசபையின் கீழும், 1993 ஒஸ்லோ உடன்படிக்கைகளின் கீழ் பொதுமக்கள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தங்கள் கண் முன்னரே வீடுகள் இடிக்கப்படுவதை பார்த்து கண்னீர் விடும் மக்கள்:
பரந்து விரிந்த கிராமமான சுர் பஹெர் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமுக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கும் இடையில் உள்ளது.
வீடுகள் இடிக்க படும் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு தளத்திலிருந்து பேசிய அல் ஜசீரா நிருபர் ஒருவர் கூறுகையில் இது இங்கு குடியிருப்பவைர்களுக்கு “மிகவும் மோசமான மற்றும் சோகமான நாள்” என்றார்.
மேலும் அந்த நிருபர் தொடர்ந்தார்..”நாங்கள் இப்போது இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்திலிருந்து மிக உரத்த இரைச்சல் வருவதைக் கேட்டோம், வெளியே பார்த்தபோது ஒரு பெரிய இயந்திர சாதனத்தை கண்டோம் அதை கொண்டு அக் கட்டிடத்தின் மேற் கூரை பிய்த்து எறியப்பட்டு கொண்டு இருந்தது . இன்று காலை வரை இரண்டு குடும்பங்களுக்கு வீடாக அது இருந்தது ” .
“இங்கு நூற்றுக்கணக்கான வீரர்கள் உள்ளனர்.அதிகாலை 2 மணி முதல் அவர்கள் வீடுகளில் இருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றி வருகிறார்கள், அவர்கள் அழிக்க விரும்பும் வீடுகளில் வெடிபொருட்களை வைக்க தொடங்கியுள்ளனர்” என்று அப்பகுதியின் சமூக தலைவரான ஹமதா கூறினார்.
கண்டனங்கள் :
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளரான ஜேமி மெக்கோல்ட்ரிக் மற்றும் ஐ.நா.வின் பிற அதிகாரிகள் கடந்த வாரம் இஸ்ரேலிய அதிகாரிகளை இடிப்புத் திட்டங்களை நிறுத்துமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.. டஜன் கணக்கான குடியிருப்புகள் உட்பட 10 கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கபட்டதால் 17 பாலஸ்தீனியர்கள் நிர்கதியாகி உள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
அதே சமயம் “இஸ்ரேலின் இவ்வாறான செயல்கள் இரு மாநில தீர்வின் நம்பகத்தன்மையையும், நீடித்த அமைதிக்கான வாய்ப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.” என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கையை வெளியிட்டது.
ஜெருசலேம் மற்றும் மேற்குக் கரையின் சில பகுதிகளில் இருக்கும் சுவர் உயர்ந்த கான்கிரீட் சுவர்களாகும் , ஆனால் சுர் பஹேரில் இது இரு அடுக்கு கம்பி வேலிகளைக் கொண்டுள்ளது. மேலும் இது இராணுவ ரோந்து சாலையால் பிரிக்கப்பட்டு காவற்கோபுரங்கள் மற்றும் மின்னணு சென்சார்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது.