Muslims States News Uttar Pradesh

’43 மாதங்களாக சம்பளம் இல்லை’! – அரசு நியமித்த மதரஸா ஆசிரியர்களின் நிலை!

கடந்த 43 மாதங்களாக(!) மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்கப்படாததை எதிர்க்கும் விதமாக உத்தரபிரதேசத்தின் பிலிபிட்டில் உள்ள மதரசா ஆசிரியர்கள் கடந்த திங்களன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தினர்.  மதரஸாக்களை நவீனமயமாக்குவதற்கான பாஜக தலைமையிலான அரசாங்க திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்கள் தான் இந்த ஆசிரியர்கள். 

மதரஸாவில் தரமான கல்வியை வழங்குவதற்கான திட்டத்தின் கீழ்  (SPQEM), உ.பி.யில் பணியமர்த்தப்பட்ட 21,000 க்கும் மேற்பட்ட மதரஸா ஆசிரியர்களுக்கு  சம்பளம் தரப்படுவது இல்லை என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மதரஸாவிலும் “நவீன, தரமான கல்வியை” வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக சொல்லும் SPQEM மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் (HRD) கீழ் வருகிறது.

 இத்திட்டத்தின் கீழ்,  கணிதம், அறிவியல், ஆங்கிலம் மற்றும் கணினி பாடங்களை மதரஸாவில் கற்பிக்க பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் அரசால் பணியமர்த்தப்பட்டனர். உ.பி., உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்களில் 50,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாக கணக்கிடப்படுகிறது.

எனினும்  உ.பி. மாநில மதரஸாக்களில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த  2016 முதல் சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. ‘நவீனமயமாக்கலுக்கான இஸ்லாமிய-கல்வி ஆசிரியர்’ சங்கத்தின் கூற்றுப்படி, பிலிபிட் மாவட்டத்தில் 89 மதரஸாக்கள் உள்ளன, இதில் 227 ஆசிரியர்கள் இந்தி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் கற்பிக்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ. 15,000, இதில் மத்திய அரசின் பங்கு ரூ. 12,000, மாநில அரசின் பங்கு  ரூ. 3,000.

” கடந்த 43 மாதங்களாக ஆசிரியர்கள் பல்வேறு வழிகளின் மூலம் அரசாங்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் அவர்களின் சம்பளத்தின் மத்திய அரசின் பங்கு கிடைத்தபாடில்லை ” என்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஃபர்ஹத் கான் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில்  ஈடுபட்ட ஆசிரியர்கள்  தங்களது  16 அம்சகோரிக்கைகள் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் எடுத்துரைக்கப்பட வேண்டி  மாவட்ட மாஜிஸ்ட்ரேட்  ரிது புனியாவிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களின் ஏழை மாணவர்களுக்கு அரசு நடத்தும் பள்ளிகளை போலவே  இலவச சீருடை மற்றும் மதிய உணவு வழங்க வேண்டும்,மதரஸா மாணவர்களுக்கு சரியான நேரத்தில் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,நீர்வாங்கு குழாய் அமைத்தல், மற்றும் கழிப்பறை வசதிகள் செய்துதர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மதரஸா ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

.