தேசியக்கொடியை ஆரம்பத்தில் இருந்தே மதிக்காத ஒரு இயக்கம் இருக்கிறது. அது எது தெரியுமா? இந்துத்துவம்தான்.
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகா சபா துவக்கத்தில் இருந்தே தேசியக்கொடியை ஏற்றுக் கொண்டதில்லை. இரண்டே முறை 14 ஆகஸ்ட் 1947, 26 ஜனவரி 1950, மட்டுமே கொடி ஏற்றி இருக்கிறார்கள். அதற்கும் காரணம் சர்தார் படேல். மூவர்ணக்கொடியை தவிர்த்து வேறு கொடியை தேசியக்கொடியாக மதிக்கும் இயக்கங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் இட்ட மிரட்டல் வேலை செய்திருக்கிறது. படேல் இறந்ததும் அந்த பயம் போய் விட்டதில் கொடி தூக்கி எறியப்பட்டு விட்டிருக்கிறது.
காரணம் இந்துத்துவர்களுக்கு மூவர்ணக்கொடியே பிடித்ததில்லை. Bunch of Thoughts புத்தகத்தில் கோல்வல்கர் மூவர்ணக்கொடியை ‘இமிடேஷன்’ என்று இகழ்கிறார். ‘ஐரோப்பிய தேசங்களின் கொடியைப் பார்த்து நாமும் அதுபோலவே வைத்துக்கொள்ள வேண்டுமா?’ என்று கேட்கிறார். ‘பாகவ த்வஜ்’ என்று அழைக்கப்படும் ஓம் சின்னம் போட்ட காவிக்கொடிதான் தேசியக்கொடியாக ஆக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விரும்பியது. அது நடக்கவில்லை என்ற ஆதங்கம் விலகவே இல்லை. (இன்றும் கூட அந்த ஆதங்கம் இருக்கலாம். முழு இந்து ராஷ்டிரமாக இந்தியா மாறியதும், மூவர்ணம் வீசி எறியப்படலாம். ஓம் போட்ட பாகவ த்வஜ் தேசியக்கொடியாக மாறலாம்.)
காந்தி கொலையுண்ட பொழுது ஆர்எஸ்எஸ் அலுவலகங்கள் முன்பு தேசியக்கொடிகளை கிழித்தும், மிதித்தும் இந்துத்துவர்கள் ‘கொண்டாடினர்.’
பாஜக வளர்ந்து தேசிய அளவில் ஆட்சியை பிடிக்கும் நிலையை எட்டியதும் ஆர்எஸ்எஸ் தனது பிம்பத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் இறங்கியது. அதன் நடவடிக்கைகளில் ஒன்று கொடி ஏற்றுவது. ஐம்பது ஆண்டுகள் கழித்து 2002ல் நாக்பூர் தலைமையகத்தில் கொடி ஏற்றும் வைபவம் துவங்கியது.
அரசியல் சாசனத்தையும் கூட இவர்கள் மதித்ததே இல்லை. அரசியல் சாசனம் அமுலுக்கு வந்த 26 ஜனவரியை இந்து மகா சபா ‘கருப்பு தினமாக’ இன்று வரை அனுசரித்து வருகிறது. இந்த இந்து மகா சபையின் தலைவர்தான் பின்னாளில் பாரதிய ஜன சங்கம் துவக்கிய ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. பாஜகவின் பீஷ்ம பிதாமகர்களில் ஒருவர்!
இதுதான் நீங்கள் தேசிய சின்னங்களை, தினங்களை மதித்த லட்சணம். இப்படிப்பட்ட பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்கள்தான் இன்று தேசபக்தி பற்றி அடுத்தவர்களுக்கு வாய் கிழிய பாடம் எடுக்கிறார்கள்.
ஆக்கம் – ஸ்ரீதர் சுப்ரமணியம்